கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல கூட்டம், மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமையில் சிங்காநல்லூர் கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்;-
மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல அதிகாரிகள் போனை எடுப்பதில்லை. அ.தி.மு.க ஆதரவு அதிகாரிகளாகவே உள்ளனர். அவர்களின் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டால், முதல்வரின் கவனத்திற்கு நேரிடையாக கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் அவர் கூறுகையில், பொதுமக்களின் பல்வேறு விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளது. அந்த விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடத்தில் வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில், உதவி ஆணையாளர் மாரிச்செல்வி, உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் பாக்கியா தனபால், தீபா இளங்கோ மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Be First to Comment