கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகளில் காத்திருக்கும் அவல நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இங நிலையில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் செல்லும் நோயாளிகளிடம் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் இல்லை என்று தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இலவச சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு உரிய பதில் கிடைக்காமல், “பணம் செலவழித்தாலும் பரவாயில்லை தனியார் மருத்துவமனைக்கு செல்லலாம்” என்று எண்ணும் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்றும் உரிய சிகிச்சை கிடைக்காததால் கடும் அவதியுற்று வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனை பொருத்தவரையில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிக்கு நோயாளிகள் பெயர்களை பதிவு செய்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், கோவை அரசு மருத்துவமனைக்கு அவசர கதியில் ஆம்புலன்ஸ் மூலமாக வந்த நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.
பல்வேறு இடங்களில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் இன்றி ஆம்புலன்ஸ் இல்லையே கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில் உடனடியாக அரசு நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.
Be First to Comment