தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிவித்து வருகிறது.
அதில், மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சலூன் கடைகளை திறக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவிற்கு சலூன் தொழிலாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து, பல்வேறு மாவட்ட சலூன் தொழிலாளர்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர். அதன்படி, தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து முடி திருத்தும் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சசிக்குமார் செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், சலூன் கடைகள் திறக்கக் கூடாது என்று தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அறிவித்த முழு ஊரடங்கினால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்தனர். இத்தொழிலை நம்பியுள்ள பல குடும்பங்கள் பசி பட்டினியோடு மிகவும் சிரமப்பட்டனர்.
மீண்டும், சலூன் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது வேதனை அளிக்கிறது. எனவே இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து காலை 6 மணிமுதல் மதியம் ஒரு மணிவரையில் சலூன்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.
Be First to Comment