கோவை அசோகபுரம் ஊராட்சி அலுவலகத்தில் ஒரே ஒரு அலுவலர் மட்டுமே பணியில் இருப்பதால் வரி செலுத்தவும், புகார் தெரிவிக்கவும், அப்ரூவல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள செல்லும்போதும் பூட்டியே கிடப்பதாக பொதுமக்கள் ஆதங்கம். தேவையான பணியாளர்களை நியமித்து ஊராட்சி அலுவலக பணிகளை மேற்கொண்டு பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அசோகபுரம் ஊராட்சியில் சுமார் 18000 பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்கு அரசால் நியமிக்கப்பட்ட ஒரு ஊராட்சி செயலர் மட்டுமே பணியில் உள்ளார்.
இவரது உதவிக்காக 2 முதல் 3 பேர் வரை தற்காலிக பணியில் அமர்த்தி ஊராட்சியில் வரி வசூல், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் எடுபுடி வேலைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் அரசால் பணியமர்த்தப்பட்டவர்களைத் தவிர இதர பணியாளர்கள் யாரும் ஊராட்சிமன்ற அலுவலகங்களில் பணியமர்த்தக்கூடாது என கோவை ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் அனைத்து ஊராட்சிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன் நகல் அனைத்து ஊராட்சி அலுவலக வாயிலில் ஒப்பட்டும் உள்ளது.
இதன் காரணமாக கோவை அசோகபுரம் ஊராட்சியில் அரசால் நியமிக்கப்பட்ட ஒரே ஒரு ஊராட்சி செயலர் மட்டுமே பணியில் உள்ளார். இவர் அவ்வப்போது தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்கு செல்லும்போதும், ஓன்றிய அலுவலகத்திற்கு செல்லும்போதும், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கு செல்லும்போதும், ஆய்வு பணிகளுக்கு செல்லும்போதும் ஊராட்சி அலுவலக்த்தை பூட்டிவிட்டு சென்றுவிடுகிறார்.
அந்த சமயங்களில் வீட்டு வரி, தண்ணீர் வரி, தொழில் வரி செலுத்த வருவோர், வீடு மற்றும் வீட்டு மனைகளை அப்ரூவல் செய்ய வருவோர், குடிநீர், மின்வசதி, சாக்கடை உள்ளிட்டவைகள் குறித்து புகார் அளிக்க வருவோர் வரும்போதெல்லாம் அலுவலகம் பூட்டிக்கிடப்பதாக ஆதங்கப்படுகிறனர்.
அதேபோல் திறந்திருக்கும் நேரங்களிலும் ஒரே பணியாளர் மட்டுமே இருப்பதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒரு வாரத்திற்கு மேலாக வேலைக்கு விடுமுறை எடுத்து வரி செலுத்த வருவதாகாவும் இதனால் வருமானம் பாதிக்கப்படுவதாகவும் போதிய அளவு பணியாளர்களை நியமித்து ஊராட்சி அலுவலகம் தொடர்ந்து செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Be First to Comment