யோகா குரு பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய திருநாட்டின் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறைகளான சித்தா, ஆயுர்வேதம்,யோகா மற்றும் இயற்கை வைத்திய முறைகளில் பல்வேறு சாதனைகளை படைத்தவர் பாபா ராம்தேவ். பதஞ்சலி நிறுவனத்தின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக சுதேசி மனப்பான்மையை வளர்க்கும் வகையில் உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர்.
பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலிகளான செயல்படுவர்கள் எப்பொழுதும் பாபா ராம்தேவ் குறித்தும் பதஞ்சலி நிறுவனம் குறித்து அவதூறு பரப்பியே வந்திருக்கிறார்கள். சித்த வைத்தியம், மூலிகை சிகிச்சை ஆகியவற்றின் மூலம் அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று ஆரம்ப காலம் முதலே நம்முடைய பாரம்பரிய சித்த வைத்தியத்தையும், ஆயுர்வேதத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற உள் நோக்கத்துடன் வெளிநாட்டு சக்திகள் செயல்பட்டு வருகின்றார்கள்.

பிரிட்டிஷ் காலத்தில் சித்த வைத்தியம் என்பது மூடநம்பிக்கை என முத்திரை குத்தப்பட்டது. ஒரு சித்த வைத்தியர் ஆயுர்வேத வைத்தியர் தவறு செய்துவிட்டால் அதனை பெரிதாக விமர்சனம் செய்து ஒட்டுமொத்த சித்த வைத்தியத்தை அழிக்க நினைப்பது ஆங்கிலேய ஆதரவு மனப்பான்மை. இந்த மனப்பான்மை இன்னும் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் என்று சொல்லக்கூடிய இந்திய மருத்துவர் சங்கத்தில் உள்ள ஒரு சிலருக்கு இருக்கின்றது. பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவம் குறித்து வாட்ஸ் அப்பில் வந்த செய்தியை படித்து காட்டியிருக்கிறார். ஆனால் அதை அவருடைய கருத்து என்று சொல்லி இந்திய மருத்துவர் சங்கத்தில் உள்ள சிலர் உள்நோக்கத்தோடு பாபா ராம்தேவுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்.
பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிரான இவர்களின் வெறுப்பு பிரச்சாரமும், திட்டமிட்ட செயல்பாடுகளும் ஊர் அறிந்த ஒன்றுதான்! தேசநலனில் அக்கறையற்ற கட்சியினர் பாபா ராம்தேவ் அவர்களையும் பதஞ்சலி நிறுவனத்தையும் ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்று சொல்லி தொடர்ந்து பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துப் பொருட்கள் மீதும், தயாரிப்புக்கள் மீதும் அவதூறு கற்பித்து வருகின்றனர். இவர்களுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Be First to Comment