கும்பகோணம் காவல் நிலையங்களில் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையை கண்டிப்பதாக அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ”கருத்துரிமையும், பேச்சுரிமையும், கேலிக்கூத்தாக்கும் வகையில் தமிழகத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது முகநூல் பதிவு, போஸ்டர் ஒட்டுதல், தடையை மீறி நிகழ்ச்சிகள் நடத்துதல் என காரணங்களை கூறி அச்சுறுத்தும் வகையில் போடப்படுகின்ற பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். கடந்த 6ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் ரவி அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு பல்வேறு பயங்கரவாத இயக்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.”
”இதற்கு முன்பாகவே பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், ஜமாத்தார்கள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ போன்ற அமைப்புகளை தமிழகத்தில் தடை செய்யப்பட வேண்டும் என திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்த சூழலில், தமிழக ஆளுநரின் பேச்சை வரவேற்கும் வகையில் கும்பகோணத்தில் மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி போஸ்டர் ஓட்டியதற்காக காவல் நிலையங்களில் வழக்குகள் போடப்பட்டுள்ளது.”
”தமிழக ஆளுநர் காவல்துறையில் குறிப்பாக உளவுத்துறையில் உயர் பதவி வகித்தவர் என்ற எண்ணத்தை தமிழக அரசு கருத்தில் கொண்டு அவரின் பேச்சில் உள்ள உண்மை தன்மையை தமிழக மக்களுக்கு உணர்த்தும் வகையில் தீவிரமாக கண்காணிப்பது மட்டுமின்றி தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இயக்கங்களை கண்டறிந்து தமிழகத்தில் தடை செய்ய வேண்டுமெனவும் இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையோடு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என தெரிவிதார்.
Be First to Comment