இனிமேல் நம்ம ஆட்கள் வசூல் செய்வார்கள். நீங்கள் வசூல் செய்ய வேண்டாம்” என கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்த்குமார் பேசும் செல்போன் ஆடியோ வைரலாகி வருகிறது. உள்ளாட்சிப் பதவிகளிலுள்ள பெண்களின் கணவர்களின் ஆதிக்கம் குறித்த புகார்கள் தமிழ்நாடு முழுவதும் எழுந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் ஆதிக்கம் குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டுவருகிறது.
பிறப்பு சான்றிதழ் முதல் கட்டட வரி வரை… லஞ்சத்தில் புரளும் கோவை மாநகராட்சி அமைச்சர்கள் வருகை, ஆய்வுக் கூட்டம் என ஆனந்தகுமார் நிழல் மேயராக வலம் வருவதாக அதிகாரிகளும், தி.மு.க மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து புகார் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் ஆனந்த் தொடர்பான ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சந்தைக் கடை வசூல் தொடர்பாக செல்போன் உரையாடலில் குமார், சம்பத் ஆகிய இருவர் பேசுகின்றனர். பிறகு அந்த உரையாடலில் இணையும் ஆனந்த், சம்பத் என்பவரிடம், அடுத்த வாரத்திலிருந்து நம்ம ஆட்கள் சந்தைக் கடையில் வசூல் செய்துகொள்வார்கள்” என்று சொல்கிறார். அதற்கு எதிரில் பேசுபவர், “எங்களுக்குப் பிரச்சனை இல்லை. நீங்கள் கோயில் கமிட்டியில் பேசிக்கொள்ளுங்கள்” என்கிறார். இந்த ஆடியோ இப்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து ஆனந்த்குமாரிடம் விளக்கம் கேட்டோம். “கோயில் பெயரைச் சொல்லி வசூலில் ஈடுபடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அதைக் கோயிலிலும் சரியாகக் கட்டுவதில்லை எனச் சிலர் புகார் கூறினர். சம்பத் என்பவர்தான் வசூலில் ஈடுபடுவதாகச் சொன்னார்கள். அதனால் அவரிடம் பேசினோம்.”
“நான் அதே ஊரைச் சேர்ந்தவன். அந்த அடிப்படையில்தான் நம் ஆட்கள் என்று கூறினேன். அதாவது கோயில்காரர்கள் வசூல் செய்துகொள்ளட்டும் என்பதுதான் அதற்கு அர்த்தம். மேலும் அது குட்டைக்கான இடம். இந்த பிரச்சனை கடந்த மூன்று வருடமாக உள்ளது. அதனை சரி செய்திடவே நான் பேசினேன். இத்தனை நாட்களாக ஆதாயமடைந்த அ.தி.மு.கவினருக்கு இதனை தாங்கி கொள்ள முடியவில்லை. மேயரின் கணவர் என்பதால் வேண்டுமென்றே தவறான தகவலை அ.தி.மு.கவினர்தான் பரப்பி வருகின்றனர்.” என்றார்.
Be First to Comment