விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள், தமிழர்க்கு எதிரான ஃபாசிச இனவாத ஒடுக்குமுறைகளே முதன்மையான காரணங்களாகும் என்று ராஜபச்சே விவகாரம் குறித்து கூறியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அதிபர் ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தை இலங்கை மக்கள் அடியோடு வெறுக்க ஆரம்பித்துவிட்டனர். இவர்கள் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கலவரம் மிகப்பெரிய அளவில் உருவானதால், வேறு வழியில்லாமல், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜபக்சே குடும்பத்தினரின் வீடுகள் போராட்டக்காரர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது.
அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சவும், அவரின் குடும்பத்தினரும் ஹெலிகாப்டரில் திரிகோணமலை கடற்படை தளத்துக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக ராஜபக்சே குடும்ப உறுப்பினரான நமல் ராஜபக்சேவின் மனைவி லிமினி, அவரின் மகன் கேசரா ஆகியோர் கொழும்பில் இருந்து திருகோண கடற்படை தளத்திற்கு தப்பிச் சென்றனர் என்று ஒரு வீடியோ மூலம் தகவல் வெளியானாது.

ஒருபுறம் ராஜினாமாவுக்கு பிறகு ராஜபக்சவை காணோம் என்ற தகவல் வெளியானது. மற்றொருபக்கம், இலங்கையை சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்கள் என்று மற்றொரு தகவல் வெளியானது. எனினும், இதெல்லாம் வதந்தி, யாரும் நம்ப வேண்டாம் என்று இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இப்படி நித்தம் ஒரு தகவல் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், தமிழக தலைவர்கள், ராஜபக்சே பதவி விலகலை வரவேற்றும், கொண்டாடியும் வருகிறது. தமிழினத்தின் சாபம்தான் இன்று வரலாறாக திருப்பி அடித்திருக்கிறது என்றும் கொக்கரித்து வருகிறார்கள்.
அந்த வகையில், விசிக தலைவர் திருமாவளவன் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், “இராஜபக்ஷே குடும்பம் தப்பிப் பிழைப்பதற்குத் தலைதெறிக்க ஓடுகிறது. இது இனவாத ஃபாசிசத்தின் எதிர்விளைவே ஆகும். ஒரே தேசம்-ஒரே கலாச்சாரமென சிங்கள இனவெறியர்கள் பன்மைத்துவத்துக்கெதிராக நடத்திய ஒருமைத்துவ கொடுங்கோன்மை-தமிழர்க்கு எதிரான ஃபாசிச இனவாத ஒடுக்குமுறைகளே முதன்மையான காரணங்களாகும்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த ட்வீட்டையும் சிறுத்தைகள் வரவேற்று கொண்டிருக்கிறார்கள். “மதவாதம் பேசியவர்களுக்கு, தற்போது தூக்கம் கெட்டுப்போயிருக்கிறது! அவர்களின் அடிவயிறு, ‘பதக் பதக்’ கென்று இருக்கிறது! சர்வாதிகாரிகளின் இறுதிக்கால நிலை,அவர்களின் கண்முன் தோன்றி,மின்னலென மறைகிறது! உலகின் சர்வாதிகார மனநோயாளிகளுக்கெல்லாம் ஸ்ரீ இலங்காதேவி பாடம் நடத்திக் கொண்டிருக்கிறாள்” என்றும், தமிழினத்தை அழித்து, இலங்கை வாழ நினைத்தது இன்று என்னவானது. என்றும் பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.
Leave a Reply