தி.மு.க. புதிய இளைஞரணி பொறுப்பாளர் பரிந்துரை பட்டியலோடு வந்தார் குறிச்சியார்!
ஏது? இப்போதே தேர்தல் ஜூரம் ஆரம்பித்து விட்டதே? என நாம் கேட்டதை பொருட்படுத்தாமல்.. முதலில் கூட்டணி பிரச்சனை பேசுவோம் என்றார்.
தி.மு.க – ம.தி.மு.க தொண்டர்களிடையே நடந்து வரும் பிரச்சனையைதானே? என்றோம்
அதேதான்..! ‘வை-கோ மீது துரைமுருகனுக்கு திடீர் கோபம் ஏன்?’ என்பதே தற்போதைய விவாதமாம். இதற்கிடையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை வருகை தந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுசெயலாளர் வை-கோ.வை வரவேற்கும் விதமாக சாலையில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனராம். கோவை சிவானந்தா காலனி பகுதியில் சாலையில், மின்சார கம்பத்தை ஒட்டி வைத்திருக்கும் பிளக்ஸ் பேனரால் விபத்துகள் நடைபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக செய்திகளை பரப்பியதே உள்ளூர் உ.பி-க்கள்தானாம்.

அது சரி..!
கத்திரிக்காய் முத்தினால் கடைக்கு வந்துதானே ஆகும். எது எப்படியோ கோவை காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
எதற்கு பாராட்டு?

கோவை அருகே ரூ.90 ஆயிரம் பணத்திற்காக கடத்தப்பட்டதாக குழந்தையை 8 தனிப்படைகள் அமைத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் மீட்டுள்ளார். கோவையை அடுத்த ஆனமலையில் பணத்திற்காக கடத்தப்பட்ட 5 மாத குழந்தை 24 மணி நேரத்திற்குள் மீடகப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை மீட்ட காவல்துறையினருக்கு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
”ஓ”

அ.தி.மு.க தரப்பிலும் பாராட்டுகள்தான். ராணிப்பேட்டையில் கிணத்துக்கடவு தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், வேட்பாளர் லிஸ்டில் இருந்த சண்முகராஜா ஆகியோர் சேர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை உள்ளூரில் இருக்கும் ர.ர-க்கள் சிலரோ ஒருவருக்கு மட்டும் முக்கியத்துவம் உள்ளது போன்ற படங்களை பதிவிட்டனராம். இதனை கண்ட முக்கிய பொறுப்பாளர் இனி அது போன்று பதிவிட கூடாது, மூவரும் இருக்கின்ற படங்களை மட்டுமே பதிவிட வேண்டும்” என கட்டளையிட்டராம்.
”அந்த பட்டியல்” என நாம் இழுத்தோம்…
”தி.மு.க. வட்டாரம் தன்னுடைய உள்ளாட்சி தேர்தல் முஸ்தீபுகளைத் தொடங்கிவிட்டது. ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், புதிய பொறுப்பாளர்கள் நியமனம் இருக்கும் என்கிறார்கள். அதுமட்டுமின்றி இளைஞரணியை பலப்படுத்தும் வேலையும் படு ஜோராக நடந்து வருகிறதாம். குறிப்பாக கோவையில் இளைஞரணியில் பகுதி மற்றும் ஒன்றிய பொறுப்புகளை பிடித்திட பலரும் முயன்று வருகிறார்களாம். ஏற்கனவே பொறுப்பில் இருக்கும் சீனியர்கள் தங்களது மகன்களுக்கு இளைஞரணி பொறுப்புகளை பெற்றுவிட அன்பகத்தில் தவம் கிடக்கிறார்களாம். ஆனால் அங்கிருக்கும் நபர்கள் பிடிகொடுப்பதில்லையாம்.”
சீனியரிட்டிக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என சீனியர் நிர்வாகிகளும், தற்போது நமக்கு சம்பாதித்து கொடுக்கும் நபர்களுக்கே பொறுப்பு வேண்டும் என சில நிர்வாகிகளும் பரிந்துரை செய்து கொண்டு இருப்பதுதான் நிலைமை!” என்று சொல்லிவிட்டு பட்டியலை நம்மிடம் கொடுத்தார்.
பட்டியலைப் பார்த்துவிட்டு குறிச்சியாரை பார்த்தோம்!
”சிட்டிங் நிர்வாகிகளும் இருக்கிறார்கள்; புதிய முகங்களும் இருக்கின்றன; பணம் படைத்தவர்களும் இருக்கிறார்கள்; வாரிசுகளும் இருக்கின்றனவே!” என்றோம்.
தங்களது வாரிசுகளை களம் இறக்கத் தயாராகி வருகிறார்கள் சிலர். ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் மாநகரட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களில் போட்டியிட இளைஞரணி பொறுப்பு இருந்தால் நல்லது என நினைக்கின்றனராம்.
அப்ப அடுத்த வாரம் கோவை தி.மு.க களைக்கட்டும்.
இளைஞரணி பொறுப்பு வரும் முன்னரே மாவட்ட நிர்வாகத்தில் வருகின்ற 10ந் தேதிக்கு மேல் மாற்றம் இருக்கும் என்கின்றனர். களை எடுக்கப்படுமா? அல்லது களை கட்டுமா? என்பது அடுத்த வாரம் தெரியும்!” என்று சொல்லிவிட்டுப் கிளம்பினார். குறிச்சியார்.
Be First to Comment