தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான வட மாநில மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். ஒரு சிலர் மட்டும் இங்கேயே இருந்து பணி புரிந்து வருகின்றனர். தற்போது கொரொனா இரண்டாம் அலை தமிழகத்தில் வீச துவங்கியதையடுத்து மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலையிலும் பல்வேறு வட மாநில மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். பொது போக்குவரத்து ரத்தான நிலையில் சொந்த செல்ல முடியாமல் தனிப்பட்ட வாகனங்களில் இ-பாஸ் பதிவு மூலம் சென்று கொண்டுள்ளனர்.
சில வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல அதிக பணம் செலவாகும் என்று வேலை செய்யும் நிறுவனத்தில் அதிக பணம் கேட்பதாகவும் பணம் தராத நிலையில் கொள்ளையடித்து செல்வதாகவும் பல்வேறு இடங்களில் கூறப்பட்டது. கோவை வெரைட்டிஹால் சாலை காவல் நிலையத்திற்குட்பட்ட எல்லையில் இயங்கி வரும் அரசு வங்கியில் கடந்த 11ம் தேதியன்று ஜன்னல் கம்பிகளை உடைத்து காசாளரின் அறையில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் உமா உத்தரவின்படி மேற்கு மண்டல உதவி காவல் ஆணையர் நவராஜ் மற்றும் ராஜ்குமார் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் கொள்ளை முயற்சி செய்யப்பட்ட வங்கி இருக்கும் அதே பகுதியில் கட்டிட வேலை செய்து வரும் மேற்கு வங்கத்தை சேர்ந்த அயிம்ஸ் பிஷ்வாஷ்(28) என்ற வாலிபரை அப்பகுதியில் பொருத்தபபட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு நேற்று மாலை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வேலை இருக்காது என்ற எண்ணத்தில் வங்கியில் கொள்ளையடித்து விட்டு ஊருக்கு திரும்பி விடலாம் என்று எண்ணியதாகவும் ஆனால் கொள்ளையடிக்க இயலாத காரணத்தால் மீண்டும் கட்டிட வேலையையே தொடர்ந்து செய்ததாகவும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் மீது கொள்ளை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Be First to Comment