மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வனச்சரகத்தில் யானை, காட்டெருமை, மான், செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாகக் காணப்படுகின்றன.
காட்டுயானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களிலும் கிராமங்களிலும் சுற்றி வருவது அடிக்கடி நடைபெறும் சம்பவமாகும்.
சிறுமுகை சத்தியமங்கலம் சாலையில் விஸ்கோஸ் தொழிற்சாலை வளாகத்திற்குள் இன்று அதிகாலையில் மூன்று யானைகள் சுற்றித்திருந்ததைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
மேற்படி தொழிற்சாலை பல ஆண்டுகளாக செயல்படாததால் அப்பகுதி முழுவதும் புதர் போல முள் செடிகள் மண்டிக் கிடக்கின்றன.
நேற்று காலை விஸ்கோஸ் ஆலை வளாகத்துக்கு எதிரே உள்ள சிதிலமடைந்த தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் இருந்து மூன்று யானைகள் போக்குவரத்து நிறைந்த சத்தியமங்கலம் சாலையை கடந்து ஆலை வளாகத்திற்குள் சென்றுள்ளன.
இதை பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் யானைகளை சில மணி நேரப் போராப்டத்திற்குப் பின் வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.
மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் காட்டு யானைகள் சர்வசாதாரணமாக சுற்றி வந்தது கண்டு அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
வனத்துறையினர் காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
Be First to Comment