என்டிசி ஆலைகளை முழுமையாக இயக்கிட கோரியும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் பல மாதங்களாக பல்வேறு தொழிற்சங்க அமைப்பினர் ,தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசிடமும் பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

எனினும் என்டிசி ஆலைகள் முழுமையாக இயக்கப்படாத நிலையில் SAVE NTC என்ற பெயரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று 9 மாநிலங்களில் போராட்டம் நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்ட நிலையில் அதன் ஒரு பகுதியாக கோவையில் 9 தொழிற்சங்கங்கள் இணைந்து பெருந்திரள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கோவை சிவானந்தா காலனி பகுதியில் காலை முதல் மாலை வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இதில் LPF, HMS, ATP, CITU, INTUC, AITUC, MLF, Dr Ambetkar, NDLF ஆகிய ஒன்பது தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார்.

இனிமேலும் என்டிசி ஆலைகளை முழுமையாக இயக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Be First to Comment