எழுவர் விடுதலை விவகாரத்தில், இரண்டாவது முறையாக அமைச்சரவை தீர்மானித்து அனுப்பினால் ஆளுநர் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டே தீரவேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;
பேரறிவாளன் மற்றும் அறுவர் விடுதலை சம்மந்தமாக தமிழ்நாடு அரசின் அமைச்சரவை முடிவெடுத்து, ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது. அதன்பின், கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமேல் அதனைக் கிடப்பில் ஆளுநர் வைத்திருந்தார்.
உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பேரறிவாளன் சார்பில் போடப்பட்ட வழக்கில், ஆளுநர் தெளிவாக முடிவெடுத்து அறிவிக்கவேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
முதலில் 3 நாள்கள் என்றும், அடுத்து ஒரு வாரம் என்றும் உச்சநீதிமன்றம் அவகாசம் கொடுத்தது. மீண்டும் தமிழக ஆளுநர் காலதாமதம் செய்த நிலையில், எதிர்க்கட்சியினரும், சட்ட வல்லுநர்களும் காலதாமதம் சட்ட விரோதம் என்று தெளிவுபடுத்தி, ஊடகங்களில் சட்ட விளக்கமாக வெளிவந்தன.
கருணை – விடுதலை – மன்னிப்புபற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநருக்குமேல் குடியரசுத் தலைவர் என்ற மேல்முறையீட்டுக்கான நிலை சட்டப்படிக்கு இல்லை. ஆளுநரிடமோ, குடியரசுத் தலைவரிடமோ இரண்டு பேருக்கும் சமமாக அந்த உரிமை, அதிகாரம் உண்டு.
இதன்படி ஆளுநரே முடிவு செய்து விடுதலை செய்ய முழு அதிகாரம் படைத்தவராவார்.
சட்டப்படி உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்!
இது இப்போது பேரறிவாளன் பிரச்சினை என்பதைவிட, மாநில அரசின் கவுரவம், உரிமைப் பிரச்சினை என்ற சரியான பார்வையும், புரிதலும் தமிழக ஆளுங்கட்சிக்கு வந்தாக வேண்டும். இப்போது இல்லை என்றால், இனி எப்போதும் இல்லை!”. இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
Be First to Comment