கோவை புறநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில், சின்னியம்பாளையத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், சூலூர் வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சன்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில், தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில்;- ”இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 திட்டம் என எண்ணற்ற திட்டங்களை கொடுத்தவர் முதலமைச்சர் எனவும், ஓராண்டில் நூறாண்டு சாதனை புரிந்தவர் முதல்வர் எனவும் புகழாரம் சூட்டினார். ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் வழங்கி உள்ளதாக கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வரின் உள்ளத்தில் எப்போதுமே கோவைக்கு தனி இடம் உள்ளது எனவும், எப்போது முதல்வரை சந்தித்தாலும் கோவையின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மட்டுமே கேட்டு விசாரிப்பார் எனவும் பேசினார்.

தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லாமல் இருந்ததே காரணம் என்றும், கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய அங்கீகாரம் அளித்ததால் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒன்றுபட்டு நின்று வெற்றி பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார். திமுகவின் கருப்பு சிவப்பு வண்ணக்கொடி இல்லை என்றால் தமிழகத்தின் வளர்ச்சி என்பதே இல்லை எனவும் திமுகவில் உள்ள நிர்வாகிகள் எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்று இப்போது வரை தனக்கு தெரியாது எனவும் அவர் கூறினார். திராவிட மாடல் என்பது வெறும் கற்பனையில் மட்டுமே உதித்த வார்த்தை இல்லை இரண்டுமே என்ற அவர், அது திமுகவின் செயல்பாட்டினால் வந்த வார்த்தை என்றும், பெரியார், அண்ணா கருணாநிதி ஆகியோர் இல்லை என்றால் பெயருக்கு பின் பட்டப்படிப்புகளை தமிழகத்தில் உள்ள எவரும் போட்டு இருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

திமுக அரசு பொறுப்பேற்று ஒரு துளி அளவு காலம் தான் என்றாலும், கடலளவு சாதனையை செய்துள்ளதாக கூறிய திருச்சி சிவா, தமிழகத்தின் வளர்ச்சிக்காக எண்ணற்றத் திட்டங்களை கொடுத்து மக்களை முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பாக வழி நடத்தி வருவதாக புகழாரம் சூட்டினார்.
இந்த பொதுக்கூட்டத்தில், கோவை புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், தலைமை செயற்குழு உறுப்பினர் இருகூர் சந்திரன், ஒன்றிய செயலாளர் ஈபி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Be First to Comment