Press "Enter" to skip to content

கடும் முயற்சியில் முன்னேறிய இந்திய ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால்

இந்த வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைக்காதா என்று ஏங்கினேன். எங்கள் வீடு இருக்கும் பகுதிகளில், மின் தடை இருந்தது. தூங்கும் போது காதைச் சுற்றி கொசுக்கள் ரீங்காரமிடும். இரண்டு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டம். குடும்ப சூழல் அது. மழை பெய்யும் போதெல்லாம், வீடு நீரில் மிதக்கும். இதில் இருந்து விடுதலை பெற விரும்பினேன். என் பெற்றோரும் தங்களால் இயன்ற அளவு முயற்சி செய்தார்கள்தான், ஆனால், அவர்களால் என்ன செய்ய முடியுமோ, அதை செய்தார்கள். அப்பா வண்டி இழுக்கும் கூலி தொழிலாளி. அம்மா வீடுகளில் வேலை செய்பவர். அவர்களால், அதைத்தாண்டி என்ன செய்ய முடியும்? – ஒரு பேட்டியில் இப்படி சொன்னவர் இந்திய பெண்கள் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால்.
யார் இந்த ராணி ராம்பால்…
ஆரியானாவில் இருக்கும் அவர் வீட்டுக்கு அருகில் ஒரு ஹாக்கி அகாடமி இருந்தது. ஹாக்கி கற்றுக் கொண்டு, விளையாட ஆர்வப்பட்டார் அவர். அதனால், பலரும் அங்கே பயிற்சி பெறுவதைப் பார்க்கப் போவார்.
ஒரு கட்டத்தில், விளையாட்டு ஆர்வம் அதிகமானது. அவர் அப்பாவுக்கு, கூலியாக தினமும் 80 ரூபாய் கிடைக்கும். ஹாக்கி மட்டையின் விலை, அவருடைய கூலியை விட பல மடங்கு.
தனக்கு ஹாக்கி விளையாட சொல்லிக் கொடுங்கள் என்று பயிற்சியாளரிடம் தினமும் கேட்பார். ஆனால், பலவீனமாக இருக்கிறாய்; உன்னால், சிறப்பான ஆட்டத்தை கற்றுக் கொள்ள முடியாது. பின், விளையாடவும் முடியாது என சொல்லி, மறுத்து விடுவார். பயிற்சிகளைத் தாங்கும் அளவுக்கு உனக்கு வலிமை இல்லை என்று சொல்லி அவருடைய எண்ணத்துக்கு தடை போட்டு விடுவார்.
சிறிது நாட்களில் உடைந்த ஹாக்கி மட்டை ஒன்று, மைதானத்தில் இருந்து அவருக்கு கிடைத்தது. அதை வைத்து பயிற்சி செய்ய ஆரம்பித்தார். ஹாக்கி விளையாட்டை சிரமமின்றி விளையாடக் கூடிய அளவுக்கு அவருடைய ஆடைகள் இருக்கவில்லை. அதனால், சல்வார்-கமீசுடன்தான் விளையாடுவார்.
ஆயிரம் சங்கடங்களைக் கடந்தும் எப்படியும் விளையாட்டில் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தனக்கு போட்டியில் ஒரு வாய்ப்பாவது கொடுங்கள் என்று பயிற்சியாளரிடம் கெஞ்சி நாட்கள் பல. கடைசியில், மனம் இறங்கினார். வாய்ப்பு கொடுக்க ஒப்புக் கொண்டார்.
சந்தோஷமாக ஏற்பார்கள் என நினைத்து, வீட்டில் இதை அவர் சொன்னபோது மறுத்து விட்டனர். பெண்கள் வீட்டு வேலைதான் செய்ய வேண்டும். நீ ஸ்கர்ட் போட்டுக் கொண்டு விளையாடுவதை பார்க்க முடியவில்லை என சொன்னார்கள்.
போட்டியில் ஆட வேண்டும்; தயவு செய்து என்னை அனுமதியுங்கள் என கெஞ்சியது மட்டுமின்றி ஒருவேளை, போட்டியில் தோல்வியடைந்தால், அதன் பின், போட்டியில் கலந்து கொள்வதையே தவிர்த்து விடுகிறேன் என வாக்குறுதி அளித்து, அனுமதி கேட்டு, பெற்றோரிடம் கேட்க அவர்களும் அரைமனதுடன் அனுமதித்தார்கள்.
அதிகாலையிலேயே பயிற்சி துவங்கி விடும். அதற்குச் செல்ல வேண்டும் என்றால், நேரம் சரியாகத் தெரிய வேண்டும். கடிகாரம் இல்லாத எனக்கு, நேரம் எப்படித் தெரியும். அவரை பயிற்சிக்கு அனுப்புவதற்காக, அவரது அம்மா பல நாட்கள், இரவு விழித்தபடியே இருப்பார். வானத்தைப் பார்த்து விடியலை அறிவார். அதன் பின் அவரை எழுப்புவார்.
பயிற்சிக்கு வரும் ஒவ்வொரு ஆட்டக்காரரும், 500 மி.லி., பால் எடுத்து வர வேண்டும் என்பது அகாடமியில் விதி. வீட்டின் நிலைமையை அணுசரித்து, 200 மி.லி., பால் தான் கொண்டு செல்வார் ராணி ராம்பால். பெயரில் மட்டுதான் பால் உள்ளது அவரிடம். ஆனால் 500 மி.லி., பால் சாப்பிட வேண்டும் என்ன செய்வது? 200ஐ 500 ஆக்கி விடுவார். பாலில், 300 மி.லி., அளவுக்கு தண்ணீர் கலந்து, தண்ணிப் பால் குடிப்பார்.
இப்படி எத்தனையோ சிரமங்கள் ராணி ராம்பாலுக்கு இருந்தன. ஆனால், தன் பயிற்சியாளர் கடைசி வரை அவருக்கு துணை நின்றார். ஹாக்கி கிட்களும் ஷூக்களும் வாங்கிக் கொடுத்தார். கடும் பயிற்சியில் ஈடுபட்டார். ஒரு நாள் கூட பயிற்சியைத் தவற விட்டதில்லை.
மாநில அணியில் இடம் பெற்றார். பல போட்டிகளில் பங்கேற்ற பின், 15வது வயதில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றார். கோப்பை கிடைத்தது.
ஒரு கட்டத்தில் இந்திய ஹாக்கி அணியில் இணைந்தார். அதன்பின்னும் விடா பயிற்சி. ஒரு கட்டத்தில், இந்திய ஹாக்கி அணிக்கு கேப்டன் ஆனார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய வீராங்கனைகள் கடைசி வரை போராடி தோல்வியைத் தழுவினர். தனக்கு இதெல்லாம் முடிவு அல்ல என்றும். என் பெற்றோருக்கும்; பயிற்சியாளருக்கும் நன்றிக் கடனாக செய்ய வேண்டியது ஒன்று இருக்கிறது. இந்தியாவுக்காக அடுத்த முறை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுக் கொடுப்பதுதான், தனது இலக்கு. அது நிறைவேறினால், பாரத அன்னைக்கும், மக்களுக்கும் நன்றியுடையவளாக இருப்பேன். என்கிறார் ராணி ராம்பால்.

More from தமிழகம்More posts in தமிழகம் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks