”பருவமழை சீஸனும் பொலிடிக்கல் சீஸனும் களைகட்டத் தொடங்கிவிட்டது. தூரல் மழையில் நினைந்தப்படி நம் முன் வந்து அமர்ந்தார் குறிச்சியார். துவட்ட துண்டும், சூடாக இஞ்சி டீயும் கொடுத்தோம். டீயை உறிஞ்சியபடி செய்திகளை அவிழ்க்க ஆரம்பித்தார் குறிச்சியார்.”
நேற்று நடந்த தி.மு.க ஒருங்கிணைந்த குறிச்சி பகுதி வட்ட கழக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் நம் குறிச்சி டைம்ஸ் பற்றி பல்வேறு விசயங்கள் பேசப்பட்டதாம். செய்திகளை உடனுக்குடன் தெரிவிப்பது யார் என்பதும், ஒவ்வொரு கூட்டம் முடிந்த அடுத்த விநாடியே குறிச்சியார் காதுகளுக்கு செய்தி போவது எப்படி? என கொந்தளித்துள்ளனர் உ.பி.க்கள்
”ஓஹோ!”
தி.மு.கவை வளர்க்க நினைக்கும் உடன்பிறப்புகள் தொடர்ந்து நமக்கு செய்திகளை தருவது கட்சியை வைத்து பணம் பார்க்க நினைக்கும் நபர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறதாம். இப்போதும் குறிச்சி தி.மு.கவினர் பற்றிய செய்திகளை சொல்கிறேன் குறித்து கொள். கட்சியை வளர்ப்பதை விட கட்சியை வைத்து பணம் ஒன்றே குறிக்கோளாக செயல்படும் நபர்களுக்குதான் தற்போது நெருக்கடியாம்!
”அப்படியா? நெருக்கடியைச் சொல்லும்!”
முதலமைச்சர் ஸ்டாலின் ‘வளர்ச்சிப் பணிகள்’ என்ற பெயரில் அமைச்சர் இல்லாத மாவட்டங்களுக்கு முக்கிய அமைச்சர்களை நியமனம் செய்துள்ளார். அதன்படி, கோவைக்கு செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளனர். சென்ற வாரம் கோவை வந்த செந்தில்பாலாஜி பொறுப்பாளர்களை சந்தித்து பேசும் போது, ”இனி கோவையில் தி.மு.க பொறுப்பாளர்கள் மட்டும் என்றில்லாமல் அடிமட்ட தொண்டனுக்கும் தேவையானதை செய்ய வேண்டும். அதனை பொறுப்பாளர்கள்தான் பார்த்து கொள்ள வேண்டும்.” என்று கறாராக சொல்லி விட்டாராம்
”ம்!”
இதனால் கோவை தி.மு.க தொண்டர்கள் குஷியில் இருக்கின்றனராம். சொன்ன செய்தியை தவறாக புரிந்து கொண்டு படு தீவிரமாக வசூலில் இறங்க ஆரம்பித்து விட்டனராம். குறிச்சி மலையை ஒட்டியுள்ள வார்டு ரேசன் கடை ஊழியர்களிடம் தீபாவளி போனஸ் வேண்டும் என வார்டு பொறுப்பாளர் கேட்டு நச்சரிக்கிறாராம். இதனால் பணிக்கு வரவே பயப்படுகின்றனராம் ஊழியர்கள்.
இதேபோல உள்ளூரில் மகளிர் சுய உதவிக்குழுவினை செயல்படவிடாமல் தடுப்பதும், மகளிர் சுய உதவிக் குழு தலைவியை மிரட்டுவதுமாக தி.மு.க பிரமுகர் செயல்படுகிறாராம். இதனை கண்டித்து மகளிர் சுய உதவிக் குழுவினரை திரட்டி விரைவில் அறிவாலயம் சென்று புகார் அளிக்க முடிவு செய்துள்ளனராம். காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு விஷயங்கள் நடந்தால் பரவாயில்லை. மூக்கை மூடி கொள்ளும் விசயங்கள் என்ன செய்வது?

”அதையும் சொல்லும்!”
கடந்த ஆட்சியில் இரண்டு கட்டண கழிப்பிடத்தில் தலா 200 மற்றும் 300 என மொத்தம் 500 ரூபாயை தினமும் வாங்கி வந்துள்ளார் பிரகாசமானவர். தற்போது ஆட்சி மாறியது ஒரு கழிப்பிடத்தின் 200 ரூபாயை வாங்கும் உரிமையை கேட்டு பெற்றுள்ளார் அடைமொழி பிரமுகர். இதனிடையே கழிப்பிட பொறுப்பாளரிடம் ரோட்டில் போவோர் வருவோரெக்கெல்லாம் கொடுத்து விட்டு கணக்கு சொல்லாதே என சத்தம் போட்டுள்ளாராம் நிர்வாகி.
இதை கேள்விப்பட்ட அடைமொழி பிரமுகர் நிர்வாகியை போனில் அழைத்து கண்டப்படி பேசியுள்ளராம். ”நான் கட்சிக்காக பல காலம் உழைப்பவன், என்னை எப்படி அப்படிச் சொல்லலாம் என கடித்து கொண்டாராம். அவரும் ”அய்யா” ”சாமி” ஆளை விட்டால் போதும் என போனை துண்டித்து விட்டராம்.
இதேபோல் மார்க்கெட்டில் இருக்கும் கழிப்பிடத்தில் தினமும் 300 ரூபாய் யார் வாங்குவது என முன்னாள் மற்றும் இன்னாள் பொறுப்பாளருக்கும் இடையே கடும் போட்டியாகி இப்போது அதுவே பகையாகி விட்டதாம்.
”இருவருக்கும் சமாதானப் படலம் நடக்குமா?”
அது நடந்ததோ இல்லையோ, இரண்டு நாளுக்கு முன் பா.ஜ.க தலைவரை மிக கடுமையாக பேசி பதிவிட்ட தி.மு.க நபரை உள்ளூர் பற்றாளர்கள் நல்லவிதத்தில் பேசி இனி அப்படி பேசக் கூடாது எடுத்து கூறியுள்ளனர். இதனையடுத்து அவரும் இனி அப்படி பேச மாட்டேன் மன்னித்து விடுங்கள் என சரண்டர் ஆகிவிட்டாராம். எப்படியோ ”கண்ட”த்தில் இருந்து தப்பித்தார்
”சரிதான்”
குறிச்சி தி.மு.கவினர் பற்றி அடுக்கடுகான செய்திகள் ஒருபக்கம் வந்து கொண்டு இருந்தாலும், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதாரன் குறிச்சி பகுதிக்கு அடிக்கடி விசிட் செய்து மக்களை சந்தித்து வருகிறாராம். சென்ற வாரம் போத்தனூர் 99 டிவிஷன் இந்திரா நகர், கல்லறை சேரி, மேட்டுதோட்டம் வந்தவர் பழுதடைந்த சாலைகளை நேரில் சென்று கள ஆய்வு பணிகளை மேற்கொண்டார். மேலும் அங்குள்ள ரேசன் கடையில் பொருட்கள் சரியாக வருகின்றதா, விநியோக சரியாக செய்யப்படுகிறதா என்றும் பார்வையிட்டார்.


”நல்ல விசயம்தானே”
ஆமாம், விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில், அ.தி.மு.கவில் கவுன்சிலராக நிற்க விரும்பும் நபர்கள் இப்போதே அதற்கான பணியை துவக்கிவிட்டார்கள் என்பதைதானே இது காட்டுகிறது. அதுமட்டுமில்லாமல் சென்ற முறை அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் வார்டு வரையறைபடிதான் வார்டுகளும் இருக்கும் என பேச்சு பரவலாக உள்ளது. இதுவும் அ.தி.மு.கவுக்கு சாதகமாகவே இருக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
”கவனிக்க வேண்டிய விசயம்தான்”
இதனையெல்லாம் வைத்துதான் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வளர்ச்சிப் பணிகளை பற்றி கலந்தாலோசிக்க தி.மு.கவின் ஒருங்கிணைந்த குறிச்சி பகுதி வட்ட கழக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத் கூட்டப்பட்டது. அதற்கு உண்டான கூட்டத்தில்தான் நம் குறிச்சி டைம்ஸையும் விட்டுவைக்காமல் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பேசிய சிலர் இனி வரும் தேர்தலில் யாருக்கு சீட் கொடுக்கப்பட்டாலும் ஒற்றுமையுடன் இருந்து வெற்றி பெற வைக்க வேண்டும் என உணர்ச்சி பொங்க பேசியுள்ளனர். இதனை கேட்டு கொண்டு இருந்த மூத்த நிர்வாகி, ”பேசும் நபர்கள் அதனை கடைபிடித்து இருந்தாலே நாம் வெற்றி பெற்று இருப்போம்” என நமட்டு சிரிப்பு சிரித்தாராம்.
”உண்மைதானே”
பேசிக்கொண்டு இருக்கும் போதே குறிச்சியாருக்கு அடுத்தடுத்து வாட்ஸ்-அப் மெசேஜ் வந்து வண்ணம் இருந்தது.
”என்ன விசயம்”
”ஒரு முக்கிய நபரிடம் இருந்து அழைப்பு, சென்று வருகிறேன்” என கிளம்பினார் குறிச்சியார்.
Be First to Comment