சுந்தராபுரம் அன்னபூர்ணாவில் காத்திருந்தோம், வியர்க்க விறுவிறுக்க வந்தமர்ந்த குறிச்சியாருக்கு சாம்பார் வடையுடன், சூடான காபி அளித்தபடி, ”மிகுந்த அலைச்சலோ!” என்றோம். சாம்பார் வடையை ருசித்தவர், ”ஒன்றிய அரசுக்கு எதிரான பந்த் எப்படி இருக்கிறது என்று பார்க்கப் போயிருந்தேன். கோவை வழக்கம்போல் இயல்பு நிலையில்தான் இருந்தது. இது ஆளும்தரப்பு கூட்டணி கட்சிகளிடையே சற்று மனவருத்ததைதான் ஏற்படுத்தியுள்ளது” என்ற குறிச்சியார், செய்திகளுக்குள் நுழைந்தார்.
”பொறுப்புக்குழு உறுப்பினருக்காக காத்திருக்கும் சக்தியான வைத்தியர் பற்றி சொல்கிறேன்.” என சொன்னீரே என நாம் இழுத்தோம்…
சரியான இடத்தில் வைத்துதான் கேட்கிறீர்கள், ”கடந்த சில நாட்களுக்கு முன்பு குறிச்சியில் பல வருடங்களாக தொழில் செய்து வரும் சக்தியான வைத்தியரிடம் கட்சியில் பொறுப்புக்குழு பதவி பெற்று தருவதாக உறுதியளித்து பணம் பெற்றுள்ளனராம் பொறுப்பாளர் ஒருவர். இப்போது 94வது வார்டில் நீங்கள்தான் கவுன்சிலர் வேட்பாளர் என அவரிடம் சொல்லி வருகிறார்களாம். இதை சொல்லி சொல்லியே சில பல ஆயிரங்களை செலவு செய்ய வைக்கின்றனராம்.” என்றார் குறிச்சியார்
”ஓஹோ… இது தெரிந்து ஏற்கனவே வேட்பாளர் கனவில் இருப்பவர்களுக்கு கோபம் வராதா?”
”வரத்தான் செய்யும், போட்டிகள் அதிகமானால்தானே சரியான நபரை தேர்ந்தெடுக்க முடியும்” என்று பூடகமாக பேசிய குறிச்சியாரை முறைத்தோம்.
“குறிச்சி தி.மு.கவில் அடுத்தடுத்து ஏகப்பட்ட புகார்கள் தலைமைக்கு செல்கின்றனவாம். அதனை கேள்விப்பட்டீரா?”
”ம்ம்… என் காதுக்கும் வந்தது. நேற்று சிலர் சென்னை அறிவாலயம் நோக்கி புகார் கொடுக்க சென்றுள்ளனராம். நாங்கள் பொறுப்பில் இருந்தாலும், எங்களை செயல்படவிடாமல் தொல்லை கொடுத்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புலம்பலுடன் புகார் கடிதம் கொண்டு சென்றுள்ளனராம். காலை ஜெயமானவரை மற்றும் கலையானவரையும் சந்தித்தவர்களை மாலை வரும் படி சொல்லி விட்டனராம். அதனால் அங்கேயே காத்திருக்கின்றனராம்.
”ம்ம்… அ.தி.மு.க தரப்பில் என்ன நடக்கிறது?”

குறிச்சியில் தாங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கட்சியாக இருந்தாலும் சரி, டெண்டர் வேலைகளும், டாஸ்மாக் பார்களும் தொடர்ந்து நாமே நடத்துவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டதாம் அவர்களுக்கு. அதனால் ஊராட்சி தேர்தலில் மற்ற இடங்களை வெற்றி பெற வைக்க வேண்டி பெரும்பாலான நிர்வாகிகள் இராணிபேட்டையில்தான் இருக்கிறார்களாம். திமிரி கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளுக்கு கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் பொறுப்பாளர்களை நியமிப்பதும், கலந்தாய்வு கூட்டத்தை நடத்துவதும் என படு பிஸியாக கட்சி வேலை செய்து வருகிறாராம்.
‘‘டி.டி.வி கட்சியினர் தி.மு.க நிகழ்வுகளை உற்று கவனித்து வருகிறார்களாமே?”
ஆமாம், குறிச்சி டி.டி.வி கட்சியில் இருக்கும் சிலர் தி.மு.க பக்கம் தாவ சரியான நேரம் பார்த்து வருகிறார்களாம். சட்டமன்ற தேர்தலில் ”நோட்டோ”விற்கு கீழ் வாக்கு வாங்கியதால் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக நிற்கலாம் அல்லது தி.மு.கவின் பக்கம் தாவி காசு பார்க்கலாம் என்ற மனநிலையில் உள்ளனராம்.
Be First to Comment