பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ளது நவமலை. இங்கு இருக்கும் மின் வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சரவணன். ஆம்புலன்ஸ் ஓட்டுனராக உள்ளார். இவரும் இவரது உறவினர்கள் இரண்டு பேரும் பொள்ளாச்சியில் இருந்து நவமலையில் குடியிருப்பிற்கு இரு கார்களில் சென்றுள்ளனர்.
நவமலை சாலையில் செல்லும் சமயத்தில் அங்கு சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை இவர்கள் சென்ற பாதையின் குறுக்கே வந்துள்ளது. இதனால் செய்வதறியாது திகைத்து வாகனத்தை பின்னோக்கி இயக்கியபோது வாகனத்தை விரட்டிய காட்டு யானை முன்னால் சென்ற ஆம்புலஸ் ஓட்டுனர் சரவணன் இயக்கிச் சென்ற காரை முட்டி தூக்கி வீசி சாலையை விட்டு பள்ளத்தில் போட்டுள்ளது.

இதுமட்டுமின்றி அந்த யானை, புதரில் சிக்கிய காரை மூன்று முறை உருட்டி போட்டுள்ளது. அப்போது அங்கு இருந்த வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினார்.
அதன் பிறகு காரில் சிக்கியிருந்த சரவணனை மீட்டு சிகிச்சைக்காக ஆழியாரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சேர்ந்தனர். சிறு காயங்களுடன் உயிர் தப்பிய சரவணன் மற்றும் அவரது உறவினர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.


Be First to Comment