கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை-மருதமலை சாலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்கலைக்கழக லோகோவில் காவி நிறம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததுடன் கடந்த பல ஆண்டுகளாகவே லோகோ அதே நிறத்தில் இருப்பதாக தெரிவித்தது.
இந்த சூழலில் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் புகைப்படம் பொருத்தப்பட்டுள்ளது. கருத்த தலைமுடி மற்றும் தாடியுடன், காவி உடையுடன் திருவள்ளுவர் அமர்ந்து இருப்பது போன்ற படம் இருக்கின்றது.
இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்டபோது, ” கடந்த 2015ஆம் ஆண்டு முதல் திருவள்ளுவர் படம் இதே போல தான் உள்ளது. இதில் எந்த மத சாயமும் இல்லை.” என்றனர்
இதனை தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளான திருவள்ளுவர் படம் மாற்றப்பட்டு வெள்ளை நிற உடையில் திருவள்ளுவர் இருப்பது போன்ற புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Be First to Comment