கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம், மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமையில், உதவி ஆணையாளர் மாரிச்செல்வி முன்னிலையிலும், சிங்காநல்லூரில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பாக கலந்தாலோசனை நடைபெற்றது.
கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் பேசுகையில்;- தமிழகத்தில், முதல்வர் தலைமையிலான சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த ஆட்சியில் மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்ய வேண்டியது மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளாகிய அனைவரது கடமையும் என கூறினார்.
22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவை பாபு பேசுகையில்;- குமரகுரு நகரில் 6 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், ஒரு லட்சம் லிட்டர் மட்டுமே வழங்கப்படுவதாகவும், கிணற்று நீரை பயன்படுத்தும் நிலை உள்ளதாகவும் பல இடங்களில் குறைவான அளவில் தண்ணீர் வருவதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் ;- தண்ணீர் பல நாட்களுக்கு ஒருமுறை வருவதால், குடிநீரை சேமித்து வைக்கும் அளவில் வீடுகளில் தொட்டிகள் இருப்பதில்லை. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகள் தற்போது வந்துள்ளதால், நேரிடையாக மக்கள் எங்களிடம் புகார் தெரிவிக்கின்றனர். அவரின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வது எங்கள் கடமை எனவும், அதிமுக ஆட்சியில் குடிநீர் பிரச்சினை எந்த அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றதோ, அதை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளோம் என்றார்.
60வது வார்டு சி்ங்கை சிவா பேசுகையில், ”தண்ணீர் வேகமாக வருவதில்லை. ஒரு வீதிக்கு தண்ணீர் விட்டால் எவ்வளவு நேரம் விடப்படுகின்றது, எனவும், நள்ளிரவு நேரங்களில் குடிநீர் விடுவதை தவிர்த்து, 2 மணி நேரம் தண்ணீர் விட்டாலும் வேகமாக விட்டால் அனைத்து வீட்டினரும் தண்ணீர் பிடிக்க முடியும்” என்றார்.
இதற்கு பதிலளித்த மண்டலத் தலைவர், ”தண்ணீர் விடுபவர்களான வாட்டர்மேன்கள் சரியான முறையில் தண்ணீர் விட வேண்டும். அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
54 வது வார்டு பாக்கியம் பேசுகையில், ”தண்ணீர் திறந்து விடுபவர் ரெஸ்பான்ஸ் கொடுப்பதில்லை. சி.எம்.சி காலனி பகுதியில் அதிக மக்கள்தொகை இருப்பதால் பொது குழாய் அமைத்து தர வேண்டும். தட்சன் தோட்டத்தில் அதிக நேரம் தண்ணீர் விட வேண்டும்” என்றார்.

”பொதுகுழாய் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என மண்டல தலைவர் தெரிவித்தார்.
மேலும், மாமன்ற உறுப்பினர்கள் பலர் குடிநீர் சீரானபடி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து பேசிய மண்டல தலைவர்,”கண்டிப்பாக ஒரு வாரத்திற்கு ஒருமுறையாவது குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், குடிநீர் வினியோகிப்பவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும், மக்கள் பிரதிநிதிகளுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என கூறினார்.
தொடர்ந்து 24 நேர குடிநீர் திட்ட அதிகாரிகள், குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பாக விளக்கம் அளித்தனர். இதில் மாமன்ற உறுப்பினர்கள் நவீன் சுமா, பொன்னுசாமி, கோவிந்தராஜ், விஜயகுமார், சரஸ்வதி, கோவை பாபு, மணியன், பூபதி, கீதா, அம்சவேணி, மோகன், பாக்கியம் தனபால், தர்மராஜ், கிருஷ்ணமூர்த்தி, சாந்தாமணி, சுமித்ரா, தீபா இளங்கோ, சிங்கை சிவா, ஆதி மகேஸ்வரி திராவிடமணி, உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜ்., உதவி பொறியாளர் எழில், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.
Be First to Comment