குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த 11லட்சத்தி 78 ஆயிரம் பேர் 4012 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்
அரசு பணியிடங்களில் உள்ள காலி பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அதன்படி பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5239 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் முதல் 12.30 மணி வரை என 3 மணி நேரம் நடக்கிறது.

தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் 117 இடங்களில் 4012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தேர்வு எழுதுபவர்கள் சிரமமின்றி சென்று வரும் வகையில் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் 150 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 48,039 நபர்கள் எழுத உள்ளனர்.

இந்த தேர்வு நடத்துவதற்காக 60 மொபைல் அலுவலர்கள் 300 தேர்வுக்கூட ஆய்வு அலுவலர்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 10 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு எழுத வருபவர்களுக்கு கிருமிநாசினிகள் வழங்கப்பட்டு பின்னர் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
Be First to Comment