குறிச்சியார் உள்ளே நுழையும் போதே அமைச்சர் செந்தில்பாலாஜி பற்றி கட்டுரை லே-அவுட் ஆகிக் கொண்டு இருந்தது. அதைப் படித்துவிட்டு, சிரித்தபடி தகவல்களைச் சொல்லத் தொடங்கினார் குறிச்சியார்!
உண்மையில் இந்த மாற்றத்தை சிலர் மட்டுமே எதிர்பார்த்திருந்தனர். கொங்கு மண்டல மேற்பார்வைக்கு உதயநிதி, கனிமொழி பெயரே அடிப்பட்டு வந்தது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த மாவட்ட வாரியாக அமைச்சர்களை நியமித்ததில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை நியமித்து இருப்பதுதான் தற்போதைய ஹாட்டாபிக்.
”ம்!’, இந்த வார கவர் ஸ்டோரியே அவரை பற்றிதான்”

மாவட்டத்திற்கு வரும் முன்னரே அவர் பெயருக்கு களங்கள் ஏற்படுத்தும்படியான செயல்களை சிலர் துவக்கியுள்ளனராம்.
”என்ன?”
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில்பாலாஜியின் துறையான டாஸ்மாக்கில்தான் பிரச்சனை. ஏற்கனவே உள்ளூரில் டாஸ்மாக் பங்கு தொகை மாத மாதம் பிரிப்பதில் பிரச்சனையாகி வரும் நிலையில், புதிதாக டாஸ்மாக் திறந்திட சிலர் முயற்சித்து வருகிறார்களாம். ஏற்கனவே சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனியில் டாஸ்மாக் இருக்க, மற்றுமொரு கடையை கொண்டு வர முயற்சிக்கிறாராம் ஒரு உ.பி., இருக்கின்ற கடை போதாதென்று மேலும் ஒரு டாஸ்மாக் எதற்கு என கோபப்பட்டுகின்றனர் அப்பகுதிவாசிகள்.
”ஓஹோ!’’ எதற்கு இந்த வேண்டாத வேலை.
என்ன இப்படி கேட்டுட்ட, டாஸ்மாக் அதிகரிக்க அதிகரிக்க பங்கு தொகை மட்டுமின்றி வசூலும் அதிகரிக்கும் அல்லவா அதற்குதான். எங்கும் வசூல்தான். தீபாவளி நெருங்கி விட்டது. வீதியெங்கும் வசூல்தான். அரசு அதிகாரிகள், ஊழியர்கள், தண்ணீர் விடும் நபர்கள், மின்சார துறையினர், தூய்மை பணியாளர்கள் என வீடுதோறும் தீபவாளி வசூல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
”இது காலகாலமாக நடப்பதுதானே?”

ஆமாம், பிரியப்பட்டு கொடுப்பதை வாங்கி கொண்டு செல்கின்றனர் அவர்கள். ஆனால் சிலரோ மினிமம் ரூ.100 வேண்டுமென கறாராகத்தான் வசூலிக்கின்றனராம். அதுமட்டுமின்றி பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் சிலர் புதிதாக கவுன்சிலர் ஆசையில் இருப்பவர்களிடத்தில் வசூலுக்கு இறங்கி விட்டனராம்.
ஏதே..ஏதே..நம்ம ஆட்களே இப்படி செய்ய ஆரம்பித்து விட்டனரே…
கொரோனா வறுமை படுத்தும்பாடுதான். இருந்தாலும் உம்ம டீம் ஆட்கள் அப்படி சென்றால் உடனே தொடர்பு கொள்ள சொல்லி நீ முகநூலில் போட்டதையும் பார்த்தேன். சூப்பர் வாழ்த்துகள்.
”அப்படியா?’ வாழ்த்துகளுக்கு நன்றி”
உனக்கு மட்டுமல்ல, இன்னொருவருக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும்.
”யாருக்கு?”
சில நாட்களுக்கு முன்னர் குறிச்சியில் சாலையோரத்தில் கடை நடத்தி வரும் நபரை போலீஸார் அப்புறப்படுத்த சொல்லிவிட்டனர். ஆனால் பல ஆண்டுகளாக இதை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு வாழும் அந்த நபருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
சாலையோரத்தில் மிக ஓரமாக தள்ளுவண்டி கடை நடத்திட அனுமதி கேட்டு அரசியல் பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், அரசு அதிகாரிகள் என பலரையும் சிபாரிசு செய்ய கேட்டுள்ளார். பணம் இல்லாதவருக்கு சிபாரிசு எப்படி கிடைக்கும்?
நொந்து போனவர் தனக்கு தெரிந்த போலீஸ்காரரிடமே சிபாரிசு கேட்டுவிடலாம் என அவருக்கு செல்போனில் அழைத்துள்ளார். அவரும் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் கடை நடத்த வழி இருந்தால் அனுமதியுங்கள் என சொல்லியுள்ளார். இதனால் பழையபடி எந்தவித பாதிப்புமின்றி கடை நடத்த வழி பிறந்துள்ளது.

பல வருடங்களுக்கு முன் நமது போத்தனூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர்தான் அந்த நல்ல மனசுக்காரர். தற்போது அவர் உயர் பதவியில் இருப்பது கூட அந்த தள்ளுவண்டிக்காரருக்கு தெரியாது. என்றோ இருந்த பழக்கம் இன்று அவருக்கு உதவியுள்ளது. இதுபோன்ற ”திரு”வாளர்கள் இருப்பதுதான் நமது ”மேனி”யை சிலிர்க்க வைக்கிறது.
Be First to Comment