இதமான, குளிரான மாலை நேரத்தில் வந்தார் குறிச்சியார். அதே விநாடி, நமது செல்போன் லைனிற்கு வந்தனர் உள்ளூர் ர.ர-க்கள்
போனை எடுத்து பேசுங்க…
”என்னை”தான் விசாரிப்பாங்க என்றார் குறிச்சியார்
“ஆமாம் சொன்னது போலவே, நீங்க வந்ததும் கூப்பிட சொல்றாங்க. ஏதேனும் சிறப்பு செய்தியா?”
”ஆமாம், பொன்விழா நிகழ்ச்சி பற்றியதாகத்தான் இருக்கும். அதை பிறகு பார்க்கலாம். இப்ப நான் சொல்றதை எழுதிக்கோ” என்றார்
“உம்… சொல்லும்!”
தி.மு.கவின் பரபரப்பான டிவிசனில் உள்ள மூன்று பொறுப்பாளர்கள் சேர்ந்து கொண்டு அவர்களின் டிவிசனில் படு அமர்க்களம் செய்கின்றனராம். பொது பிரச்சனையான ரேசன் கடை முதல் குடும்ப பிரச்சனையான (காதல் பிரச்சனை உட்பட) காவல் நிலையம் வரை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என கட்சியினரிடையேயும், வார்டில் உள்ள மக்களிடமும் கூறி வருகின்றனராம்.
போதாக்குறைக்கு அதில் ஒருவருக்கு எப்படியும் கவுன்சிலர் சீட் வாங்கி விடலாம் என்ற மற்றவர்கள் அவருக்கு சுதி ஏற்றி விடுகின்றனராம். தினமும் எங்களை கவனித்து கொள்ளுங்கள் கவுன்சிலர் சீட் வாங்கியதும் நாங்கள் உங்களுக்காக வேலை செய்கிறோம் என சொல்லியே அவரிடம் கல்லா கட்டுகின்றனராம். இவரது ஆசைப்பற்றி இவரை கட்சிக்கு கொண்டு வந்த அதே வார்டில் ஏற்கனவே ரேசில் இருக்கும் ”தானாக விலகிய முன்னாள் பகுதிக்கு” தெரியுமா என்று கிண்டலடிக்கின்றனர் அவருடன் இருப்பவர்களே.
“அப்புறம்?”
சுந்தராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் பிரமாண்டமாக இருக்கும் காலி இடம்தான் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. பேங்க், காவல்நிலையம் அல்லது தீயணைப்பு நிலையத்தின் பயன்பாட்டிற்காக என இருந்த நிலம் பல வருடங்களாக பயன்பாட்டில் இல்லாததால் பிரபல தனியார் கம்பெனி அந்த இடத்தை வளைத்து போட்டு தற்போது கட்டிடம் கட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. கம்பெனியினரோ நாங்கள் முறையாகத்தான் கட்டிடம் கட்டுகின்றோம் என்கின்றனர். ஆனால் ஏற்கனவே உயர் நீதிமன்றம் கட்டிடம் கட்ட தடை விதித்துள்ளது என சிலர் கூறி வருகின்றனர். எது உண்மையோ தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்
“நெருப்பு இல்லாமல் புகையுமா?” அ.தி.மு.கவினர் எதற்கு உன்னை கேட்டு போன் செய்தனர்?
அதுவா! காலையில் நமது பகுதியில் ஒரு இடத்தில் அ.தி.மு.க கொடியேற்று விழா நிகழ்ச்சி நடந்தது. அதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் படுதடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அனைவரும் வருந்தம் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்து விட்டது.
“ரொம்ப சஸ்பன்ஸ் வைக்காதீர்”
நீ அவசரப்படாத, கொடியேற்றும் போது அனைவரும் வாழ்த்து கோஷங்கள் போட மேலே சென்ற கொடியை பார்த்தவர்களுக்கோ அதிர்ச்சி. கொடியில் இருந்த அண்ணா தலைகீழாக இருந்தார். ஆம், கொடி தலைகீழாக ஏற்றப்படத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் கூச்சலிட, கொடி உடனே இறக்கப்பட்டு சரி செய்து தொண்டர்களால் ஏற்றப்பட்டதாம்.
அட, ”தொண்டர்கள் கட்சி என்பதை காலம் எதார்த்தமாக உணர்த்திவிட்டதோ.” என்றோம்
“அடேயப்பா இதை இப்படி கூட சொல்லலாம்” என கிண்டலடித்து சென்றார் குறிச்சியார்.
Be First to Comment