Press "Enter" to skip to content

குறிச்சி அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க நிலை?

‘பழையவர்களுக்கு செக்… புதியவர்களுக்கு லக்’ என குறிச்சியார் அனுப்பிய வாட்ஸ் அப் தலைப்பு வந்து சேர… குறிச்சியாருக்காக காத்திருந்தோம். ‘‘உள்ளாட்சித் தேர்தல் உற்சாகம் ஆரம்பித்துவிட்டது. நாளையே கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு வெளியாகலாம்” என சொல்லியபடி வந்து அமர்ந்தார் குறிச்சியார்.

”அப்படியா?”

கோவை மாநகராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் ஆண்களைவிட பெண்கள்தான் ஏக உற்சாகத்தில் இருக்கிறார்கள். பழமையான கோவை மாநகராட்சியில் முதல் முறையாக பெண் மேயராகும் வாய்ப்பு இப்போதுதான் ஏற்பட்டுள்ளது. இதுவரை அ.தி.மு.கவினர் மட்டுமே மேயராக இருந்துள்ளனர். தி.மு.க சார்பில் அதன் கூட்டணியான காங்கிரஸார் மட்டுமே மேயராக கோவையில் இருந்துள்ளனர். இந்த முறை எப்படியும் வெற்றி பெற்று மேயராகி விட வேண்டும் என்ற முனைப்பில் தி.மு.கவினர் உள்ளனர்.
அதனால் கோஷ்டி அரசியல் செய்யும் நபர்களை தவிர்த்து விட்டு, 70 சதவிகிதத்திற்கு மேல் புதியவர்களுக்கு வாய்ப்பு தருவதாக முடிவெடுத்துள்ளதாம் தி.மு.க தலைமை.

”ஓ”

குறிச்சி தி.மு.கவின் வேட்பாளர் லிஸ்டில் புதியவர்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்கின்றனர். வேட்பாளர் லிஸ்டில் இருக்கும் புதியவர்களுக்கு அடித்திருக்கும் இந்த லக், பழையவர்களுக்கு செக்-காக அமையும் என்கின்றனர் உடன்பிறப்புகள். வரும் காலங்களில் கோஷ்டி அரசியலை களைய இதுவே ஆரம்பமாக இருக்கும் என்கின்றனராம். குறிச்சியின் இரு பெரும் நிர்வாகிகள் தங்களுக்குள் இருந்த ஈகோ-வை மறந்து விட்டு, வெற்றி பெற்றால் மட்டுமே நாம் அரசியலில் நிலைத்திருக்க முடியும் என முடிவெடுத்துள்ளனராம். இதனால் தங்களது வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு துதி பாடும் நபர்களை இந்த தேர்தலுடன் தள்ளி வைத்திட வேண்டும் என பேசி உடன்படிக்கை செய்துள்ளனராம்.

”ம்”

இது இப்படி இருக்க. இத்தனை நாள் நம்பியிருந்த எங்களுக்கு சீட் கொடுக்காமல், எங்களையெல்லாம் தங்கள் பின்னால் இருக்கும் அடிபொடிகளாக காண்பித்து தங்களை தலைவர்களாக நிலைநிறுத்தும் முயற்சியில் இருப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம், என கூறுகின்றனராம் இப்போதே விரக்தியில் இருப்பவர்கள்.

”அது சரி”

இதற்கு சற்றும் குறையாமல் குறிச்சி அ.தி.மு.கவினர் களத்தில் உள்ளனர். அ.தி.மு.கவை பொறுத்தவரை வேட்பாளர்கள் லிஸ்ட் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே தயாரகிவிட்டதாம். பா.ஜ.க கூட்டணிக்கு ஒரு வார்டை ஒதுக்கிட முடிவு செய்துள்ளனராம். அது பா.ஜ.கவிற்கே ஷாக்-காக இருக்கும் என்கின்றனர்.

”எந்த வார்டு”

அவசரப்படாதே, என நாம் கொடுத்த இஞ்சி டீ-யை ருசித்தவாறு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தினார்.

”சொல்லுங்க” என நாம் அவசரப்படுத்தினோம்.

உனக்கு சொல்லாமலா? குறிச்சியை பொறுத்தவரை பா.ஜ.கவின் சார்பில் இரண்டு வார்டுகளை கேட்டுள்ளனராம். அதில் பிரதானமாக 94வது வார்டை பா.ஜ.க முக்கியமாக எதிர்பார்க்கிறதாம். அது தவிர 96, 97 மற்றும் 98 ஆகியவை ஏதேனும் ஒன்று என முடிவு செய்திருக்கின்றனராம்.

இந்நிலையில் தி.மு.கவிலும் யாரும் எதிர்பார்க்காதவாறு 97வது வார்டில் தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் நிவேதா சேனாதிபதி வேட்பாளராகும் வாய்ப்பு உள்ளதாம். அ.தி.மு.க சார்பிலோ இந்த வார்டை மையப்படுத்தி மாநில நிர்வாகியான குறிச்சி மணிமாறன், டிவிசன் செயலாளர்களான கேபிள் பாபு, ஆர்.டி.ஓ.பிரகாஷ் ஆகியோர் சீட் கேட்டுள்ளனராம். மாநில நிர்வாகி பொறுப்பில் உள்ள குறிச்சி மணிமாறனை தவிர்க்க முடியாது. சென்ற முறை சீட் கொடுக்கப்பட்டு தேர்தல் நடைபெறாததால் மீண்டும் கேபிள் பாபுவிற்கே சீட் கொடுக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், முக்கிய நிர்வாகியின் ஆதரவாளராக ஆர்.டி.ஓ.பிரகாஷிர்க்கும் வாய்ப்பு மறுக்க முடியாதாம்.

”அப்புறம்”

அதனால் தான் மூவரில் இருவர் வருத்தப்படுவார்களே என்று 97வது வார்டை பா.ஜ.கவிற்கு ஒதுக்கிட அ.தி.மு.க ஆலோசனை செய்து வருகிறதாம். இதனை கேள்விப்பட்ட பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவின் இரு தரப்பினருமே அதிர்ச்சியில் உள்ளனராம்.
94வது வார்டில் அ.தி.மு.கவின் முக்கிய புள்ளி தேர்தலில் நிற்க போவதில்லை என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், எப்படியும் அந்த வார்டை பெற்றுவிடலாம் என ஆசையில் இருந்தது பா.ஜ.க. ஆனால் மீண்டும் இந்த வார்டை வார்டு மூத்த முன்னோடிக்கு வாய்ப்பு கொடுத்து அ.தி.மு.கவே தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாம்.

”பலே”

இதன் மூலம் 94வது வார்டை தக்க வைத்து 97-யை விட்டு கொடுத்து கனகச்சிதமாக அரசியல் சதுரங்கம் ஆட துவங்கியுள்ளது அ.தி.மு.க தரப்பு. இந்த முடிவை சற்றும் எதிர்பார்க்காத இருதரப்பினரும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஒற்றை காலில் நிற்கின்றனராம்.

”எது எப்படியோ இந்த சுவாரஸ்யமெல்லாம் வேட்பாளர் லிஸ்ட் வரும் வரைதான்” என கிளம்பினார் குறிச்சியார்.

Enable Notifications    OK No thanks