கோவை – கேரளா எல்லையான வாளையார் பகுதிக்கு கேரள மாநில பேருந்துகள் மூலம் வருபவர்கள் எந்த வித பரிசோதனைகளும் இல்லாமல் தமிழக எல்லைக்குள் வருகின்றனர். அதே வேளையில் கோவையில் இருந்து கேரளா செல்பவர்கள் கடும் கட்டுப்பாடுகளை கடந்துதான் கேரளாவுக்குள் நுழையும் சூழல் உள்ளது.
தமிழகத்தில் கொரொனா தொற்று பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளதால் படிப்படியாக இயல்பு நிலை திரும்ப துவங்கியுள்ளது. கொரொனா தொற்று காரணமாக தமிழக – கேரள மாநிலங்களுக்கு இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்படாத நிலையில் கோவையிலிருந்து கேரளா எல்லையான வாளையார் பகுதி வரை மட்டும் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல கேரள மாநில பேருந்துகளும் தமிழக எல்லையான வாளையார் சோதனைச் சாவடி வரை இயக்கப்படுகின்றன.

இ ரெஜிஸ்டிரேசன் இல்லாமல் வரும் பயணிகளுக்கு கேரள சோதனை சாவடியிலேயே இ ரெஜிஸ்டிரேசன் எடுத்து கொடுக்கப்படுகின்றது.மேலும் கொரொனா பரிசோதனை சான்றிதழ் இல்லாமல் நுழைபவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். இ ரெஜிஸ்டிரேசன், கொரொனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமல் கேரளாவுக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை என கேரள காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதே வேளையில் கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் வருபவர்களுக்கு இ ரெஜிஸ்டிரேசன் கட்டாயம் என்றாலும் பேருந்துகள் மூலம் கேரளாவில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் கோவைக்கு இ ரெஜிஸ்ட்ரேஷன் இல்லாமல் எளிதாக வருகின்றனர். கேரளாவில் ஜிகா என்ற புதிய வகை வைரஸ் பரவி வருவதுடன் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளாவில் இருந்து கோவை வழியாக தமிழகம் வரும் வாகனங்களும், பேருந்து பயணிகளும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Be First to Comment