கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் நிலையில், கோவை மாவட்டத்தில் இதுவரை ஒரு இலட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் நிரம்பி விட்டதால் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.
கோவை கரும்புக் கடை பகுதியில் உள்ள மஸ்ஜிதுல் ஹீதா பள்ளிவாசல், கோவிட் 19 ஆலோசணை மற்றும் தகவல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. 40 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளி வாசல் தற்போது கொரோனாவிற்கு எதிரான ஆலோசணை மற்றும் தகவல் மையமாக மாறியுள்ளது. ஜமா அத்தே இஸ்லாஅமி ஹிந்த் மற்றும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு ஆகிய அமைப்புகள் சார்பில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மருத்துவ ஆலோசணைகள் வழிகாட்டுதல்கள், ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் குறித்த விபரங்கள், மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்சனைகளுக்கு தீர்வு, மருத்துவர்களுடான கலந்தாய்வுகள், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்திற்கான வழிகாட்டுதல் ஆகியவை வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் செயலாளர் சபீர் அலி கூறுகையில், “மஸ்ஜிதுல் ஹீதா பள்ளிவாசல் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கொரோனா பரவல் காரணமாக அரசின் வழிகாட்டுதகளை பின்பற்றி பள்ளிவாசலில், தற்போது தொழுகைகள் நடைபெறுவதில்லை. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு பயனளிக்கும் விதமாக ஹீதா பள்ளிவாசல் கோவிட் 19 ஆலோசணை மற்றும் தகவல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. பள்ளிவாசலின் தரைத்தளம் ஆலோசணை மற்றும் தகவல் மையமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த பள்ளிவாசலில் இரண்டு விதமான சேவைகள் செய்யப்படுகின்றன. தகவல் மையத்திற்கு அழைப்பவர்களுக்கு மருத்துவமனை, படுக்கைகள், ஆக்சிஜன் தேவை குறித்த விபரங்கள் வேண்டுவோருக்கு, எங்களது தொடர்பின் மூலம் அத்தகவல்களை பெற்று அரை மணி நேரத்திற்குள் வழங்கி வருகிறோம். இங்கு 8 பேர் 2 ஷிப்ட்களாக பணியாற்றி வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக இயங்கி வரும் இந்த தகவல் மையத்திற்கு நாள் ஒன்றுக்கு 50 அழைப்புகள் வருகின்றன. எங்களது வழிகாட்டுதலால் நூற்றுக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர்.

இதேபோல கொரோனா பயம் மற்றும் தனிமை ஆகியவை மன அழுத்தத்தை தருவதால், பலர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருவதற்கான ஆலோசணைகள் ஆலோசணை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் உள்ள நிபுணத்துவம் பெற்ற 2 மருத்துவர்கள் உள்ளனர். அவர்கள் மன அழுத்ததில் இருந்து மீண்டு வர ஆலோசணை வழங்கி வருகின்றனர். நேரில் வர முடியாதவர்களுக்கு போன் மூலம் ஆலோசணை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவது தொடர்பான சந்தேகங்கள், விளக்கங்கள் தேவைப்படுவோருக்கு, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உதவும் வகையில் அலோபதி, சித்தா, ஹோமியோ ஆகியவற்றை சேர்ந்த 69 மருத்துவர்கள் உள்ளனர். நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் இடையே போன் மூலம் தொடர்புபடுத்தி ஆலோசணை வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனாவிற்கு எதிரான எங்களது பணியில் மொத்தம் 74 பேர் பணியாற்றி வருகின்றனர். இதற்கான செலவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இம்மையம் வருகின்ற 24 ம் தேதி அரசு அதிகாரிகளால் திறக்கப்பட்டு முழுமையாக செயல்பாட்டிற்கு வரும். இதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், ஊரடங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ஆகியவையும் எங்களது அமைப்பு சார்பில் வழங்கி வருகிறோம்.” என அவர் தெரிவித்தார்.
Be First to Comment