கோயம்புத்தூர் வ.உ.சி மைதானத்தில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மாவட்ட ஆட்சியர் ஜீ.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இன்று காலை 9.30 மணி அளவில் விழா மேடைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதற்கு பிறகு மாவட்ட காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

பின்பு தேசியக்கொடி நிறத்திலான மூவர்ண பலூன்கள் காற்றில் பறக்க விடப்பட்டன. இதனையடுத்து காவல்துறை, மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, வனத்துறை, வேளாண் பொறியியல் துறை, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை, உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 242 அரசு அதிகாரிகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சித் துறையின் மாவட்ட முன்மாதிரி விருது கிணத்துக்கடவு கிராமத்திற்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தினை பொதுமக்கள் உற்சாகத்தோடு பார்வையிட்டனர்.
Be First to Comment