கோவை சாய்பாபாகாலனி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார்.பொறியியல் துறையில் முதுகலை பட்டதாரியான இவர், ஓட்டல் துறையில் ஆர்வம் கொண்டு,கோவை அரசு கலை கல்லூரி சாலையில் உள்ள சேரன் டவரில் 99 வெரைட்டி தோசைகளை வழங்கும் விதமாக தோசா இன்பினிட்டி எனும் ஓட்டலை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆட்டோ,கார்,வேன் உள்ளிட்ட வாடகை வாகனங்களை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு மட்டும் தனது ஓட்டலில், பத்து ரூபாய்க்கு இரண்டு தோசைகள் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற வாடிக்கையாளர்களை கவரும் விதமாக தற்போது பல்வேறு தொழில்களில் இலாபம் ஈட்டும் விதமாக ஆபர்கள் பலர் வழங்கி வரும் நிலையில், ஓட்டுனர்களுக்காக லாப நோக்கமின்றி முத்துக்குமார் வழங்கியுள்ள இந்த ஆஃபர் திட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது குறித்து தோசா இன்பினிட்டி ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் முத்துக்குமார் கூறுகையில்,தமது பொறியியல் பட்டபடிப்பை முடித்த பிறகு இரண்டு ஆண்டுகள் கார் டிரைவராக இருந்துள்ளதாகவும்,இருந்த போதும் ஓட்டல் துறையில் உள்ள ஆர்வத்தால் ஓட்டல் நடத்தி வருவதாக தெரிவித்தார். தம்முடைய அனுபவத்தில் வாடகை வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு சரியான நேரத்திற்கு சரியான உணவு கிடைக்காமல் அனுபவ ரீதியாக தாம் உணர்ந்துள்ளதால்,தமது சொந்த ஓட்டலில் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக கூறினார்.பொறியியல் துறையில் முதுகலை பட்டம் வென்ற இளைஞர் முத்துக்குமார் ஓட்டல் நடத்தி வருவதுடன் லாப நோக்கமின்றி ஓட்டுனர்களுக்கு பத்து ரூபாய்க்கு இரண்டு தோசைகளை வழங்கி வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்..
Be First to Comment