ஆன்லைன் மோசடி கும்பலின் கைவரிசை அதிகரிப்பால் சைபர் கிரைமில் புகார்கள் குவிந்துள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
கோவை மாநகரில் சைபர் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஜார்கண்ட் உள்பட வடமாநிலங்களில் இருந்து பொது மக்களின் செல்போன் எண்களை தெரிந்து கொண்டு போன் மூலம் தொடர்பு கொள்கிறார்கள்.
வங்கிகளில் கணக்கு வைத்து இருப்பவர்களின் செல்போன் எண்ணுக்கு அவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் இருந்து அனுப்புவதுபோல் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
அந்த குறுஞ்செய்தியில் அவர்களது வங்கி கணக்குடன் பான்கார்டு விவரங்கள் இணைக்க வேண்டி உள்ளதால் விவரங்களை மீண்டும் பதிவு செய்யவும் என்று குறிப்பிட்டு ஒரு இணையவழி தொடர்பு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதனை பார்ப்பவர்கள் வங்கியில் இருந்து வந்து இருப்பதாக ஏமாந்து இணையவழி தொடர்பில் உள் நுழையும்போது மோசடி கும்பல் அனைத்து தகவல்களையும் திருடி வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்து விடுகிறார்கள்.
இதேபோல் ஒருவரின் முகநூல் கணக்கை போல் போலி கணக்கை உருவாக்கி, அந்த முகநூலில் உள்ளவர் பண உதவி கேட்பதுபோல் மெசேஜ் அனுப்பியும் மோசடி நடைபெறுகிறது.
ஒவ்வொரு காலகட்டத்துக்கு தகுந்தவாறு புதிய, புதிய மோசடிகளை அரங்கேற்றி வருகிறார்கள். கொரோனா காலம் என்பதால் கொரோனா உதவித்தொகை அனுப்ப வேண்டியது உள்ளது.
வங்கி கணக்கு எண், ரகசிய குறியீடு எண் ஆகியவற்றை கூறுமாறு தெரிவித்தும் மோசடி நடைபெறுகிறது. கோவை மாநகரில் ஆன்லைன் மோசடி கும்பலின் கைவரிசை அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் இது வரை 1000 புகார் மனுக்கள் வந்து உள்ளன.
Be First to Comment