கோவையில் தனியார் நிதி நிறுவனம் வீட்டுக்கடன் தவணை கேட்டு தொந்தரவு செய்ததால் விவசாயி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் தீனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் தனது தாய் பாக்யா தனது மனைவி கோகிலா, ஒரு வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். விவசாய நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்த ஆனந்தன், எலக்ட்ரிக்கல் , பிளம்பர் ஆகிய வேலைகளும் செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தீனம்பாளையத்தில் தனக்கு சொந்தமான இடத்தில் 45 லட்ச ரூபாய்க்கு ரிலையன்ஸ் ஹோம் லோன் நிறுவனத்தில் வீட்டுக்கடன் பெற்று, வீடு கட்டியுள்ளார்.

கொரோனா காலத்தில் போதிய வேலையின்மை, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சரிசர தவணை கட்ட முடியாமல் சிரமம் அடைந்துள்ளார். இந்நிலையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தவணைதொகையை கட்ட வலியுறுத்தி தொலைபேசியிலும் நேரிலும் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆனந்தன் சில மாதங்களுக்கு முன்னர் தற்கொலைக்கு முயன்றதாகவும் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் மீண்டும் நிதி நிறுவன ஊழியர்கள் ஆனந்தனை வீட்டுக்கே வந்து தாகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சளுக்கு ஆளான , ஆனந்தன் தனது தற்கொலைக்கு நிதி நிறுவன ஊழியர்களே காரணம் என்றும் தனது வீட்டை நிதிநிறுவனத்திடமிருந்து மீட்டு தனது தாயிடம் ஒப்படைக்குமாறும் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தனது விவசாய தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்தனின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கடிதத்தை கைப்பற்றி தொண்டாமுத்தூர் காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .மேலும் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனிடையே இறுதியாக ஆனந்தன் தனது உறவினருடன் தொலைபேசியில் உரையாடும் ஆடியோ வெளியாகி உள்ளது.
Be First to Comment