கோவை மாநகராட்சித் தேர்தல் பரிசுப் பொருள் விநியோகம்… ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்த அரசியல் கட்சிகள்!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முன் எப்போது இல்லாத அளவுக்கு பரிசுப் பொருட்களாலும், பணத்தாலும் விலை பேசி வாங்கப்பட்டிருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு, அரசியல் கட்சியினர் செயல்பட்டுள்ளனர்; மொத்தத்தில், இந்தத் தேர்தல் வாயிலாக ஜனநாயகம் விலை பேசி வீழ்த்தப்பட்டிருக்கிறது என, ஜனநாயகவாதிகள் புலம்பித் தீர்க்கின்றனர்.
குறிப்பாக, கோவை மாநகராட்சித் தேர்தலுக்காக, கோவை மாவட்டம் முழுவதும் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் நடத்திய கூத்துக்களைப் பார்த்து விட்டு, ஜனநாயகவாதிகளுக்கு இருதய அடைப்பு வராததுதான் குறை. அந்த அளவிற்கு முறைகேடுகள் நாலாபக்கமும் தங்கு தடையின்றி அரங்கேறி இருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும், கோவையை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என, முன்னாள் அமைச்சர் வேலுமணியும், இந்த முறை, மாநகராட்சியை தி.மு.க., சார்பில் கைப்பற்றி விட வேண்டும் என இந்நாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் கரண்சிகளை அள்ளி விட்டது, தேர்தல் நடைமுறைகளுக்கு எதிரானது.

தி.மு.க.,வினர் பெட்டி பெட்டியாக ‘ஹாட் பாக்ஸ்’களை கொண்டு வந்து, கோவை மாநகரம் முழுக்க விநியோகம் செய்வதாக அ.தி.மு.க.,வினர் குற்றம்சாட்டினர்.
பிரசாரம் ஓய்வு பெறுவதற்கு முன்னர் , கோவையில் பிரசாரத்தில் ஈடுபட்டார் அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி.
“எழுபது லாரிகளில் ‘ஹாட் பாக்ஸு’கள் வந்து இறங்கியிருக்கிறது. இதுஎல்லாம் தேர்தல் அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் தெரியாதா? என்று கேள்வி எழுப்பினார். அதோடு, “தி.மு.க., கொடுக்கும் பரிசுகளை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், ஓட்டை அ.தி.மு.க.,வுக்கு போட்டு விடுங்கள்” என லாவகமாகப் பேசிச் சென்றார்.
வாக்காளர்களுக்கு பரிசளித்து அல்லது பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதை அ.தி.மு.க., தரப்பு தடுக்காதாம்; விமர்சிக்காதாம். பரிசையும், பணத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள்; ஆனால், ஓட்டை மட்டும் எங்களுக்குப் போட்டு விடுங்கள் என சொல்லி விடுவார்களாம்.
அதேபோல, தி.மு.க.,வினர் ‘ஹாட் பாக்ஸ்’களை கொடுப்பது போன்ற வீடியோ காட்சிகளை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு கேள்வி எழுப்புவார்களாம்.
கோவையின் குனியமுத்தூர், சுகுணாபுரம், சுந்தராபுரம் ஆகிய பகுதிகளில் பெட்டி பெட்டியாக எடுத்துச் செல்லப்பட்ட ‘ஹாட் பாக்ஸ்’களை போலீசாரும், பறக்கும் படையினரும் ஒப்புக்குப் பறிமுதல் செய்தனர். பீளமேடு பி.கே.டி. நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர், 500க்கும் மேற்பட்ட ‘ஹாட் பாக்ஸ்’களை பறிமுதல் செய்தனர்.
நஞ்சுண்டாபுரம் தோட்டத்தில் உள்ள குடோன் ஒன்றில் வாக்காளர்களுக்குக் கொடுக்க பரிசுப் பொருட்கள் வைக்கப்பட்டிருப்பதாகப் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் அங்கு சென்று சோதனையிட்ட பறக்கும் படை அதிகாரிகள், 10 பெட்டிகளிலிருந்த 600க்கும் மேற்பட்ட ‘ஹாட் பாக்ஸ்’களை பறிமுதல் செய்தனர். தெலுங்குபாளையத்தில் 20க்கும் மேற்பட்ட ‘ஹாட் பாக்ஸ்’கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குத்துப்பாளையம் பகுதியில் சிலர் இருசக்கர வாகனத்தில் ‘ஹாட் பாக்ஸு’டன் வந்தனர். அவர்கள், பறக்கும் படை அதிகாரிகளைப் பார்த்ததும் வண்டியை அப்படியே போட்டுவிட்டுத் தப்பிவிட்டனர். பின்னர் அந்த வாகனத்திலிருந்த 30க்கும் மேற்பட்ட ‘ஹாட் பாக்ஸ்’களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

இப்படி கோவை மாவட்டம் முழுக்க, ஹாட் பாக்ஸுகளால் நிரப்பப்பட்டிருக்கிறது. இப்படியெல்லாம் பரிசுப் பொருள்கள் விநியோகமும், பணப் பட்டுவாடாவும் அச்சமில்லாமல் நடக்கிறது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளான நீங்கள் என்ன செய்கிறீர்கள் என சில அதிகாரிகளிடம் கேட்டோம். அவர்கள் சொன்னது:
உள்ளாட்சித் தேர்தல் என்றாலே, ஆண்டாண்டு காலமாகவே இப்படித்தான் நடக்கிறது. இந்த முறை கொஞ்சம் கூடுதலாக நடந்திருக்கிறது அவ்வளவுதான். கோவையைப் பொறுத்த வரை, எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் தி.மு.க., இருப்பது போல, அ.தி.மு.க.,வும் முனைப்பு காட்டுகிறது.
ஆளும்கட்சியினர் மட்டுமின்றி எதிர்கட்சியினரும் பணமும்; பரிசுப் பொருட்களும் கொடுத்தார்கள். பணம் கொடுப்பதையும், பரிசுப் பொருட்களையும் பொதுமக்களிடம் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, அதைத் தடுக்கப் போன அரசு அதிகாரிகளை, வாக்காளர்கள் தாக்க வந்திருக்கின்றனர்.
ஆக, பரிசுப் பொருள் மற்றும் பணத்துக்கு ஆசைப்படுவது வாக்காளர்கள்தான். அவர்கள் மனங்களில் மாற்றம் ஏற்படாமல், பெரிய அளவில், இந்த மாதிரியான காரியங்களை ஒரு போதும் தடுக்க முடியாது.
கோவை மாநகரில் இருக்கும் நூறு வார்டுகளில் உள்ள 15 லட்சத்து 38 ஆயிரத்து 411 வாக்காளர்களில் 80 சதவிகிதம் வாக்காளர்கள், இரு தரப்பிலும் இரண்டாயிரம் ரூபாயைப் பெற்று விட்டனர்.
இந்த லட்சணத்தில் தான், தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இனி, ஜனநாயகம் குறித்தெல்லாம் யார் – எப்படி பேச முடியும்? இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்தத் தேர்தலுக்கு அடுத்த நிலையில், மாநகராட்சி மேயர் தேர்தல் நடக்கவிருக்கிறது. அவர்களை, தற்போது தேர்வு செய்யப்படும் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு கவுன்சிலரும், தற்போதைய தேர்தலுக்கு செலவழித்ததையெல்லாம் அப்போது எடுக்க முயற்சிப்பர். அதனால், அந்த தேர்தலுக்கு இன்னொருமொரு பெரும் கலாட்டா காத்திருக்கிறது.
வார்டு கவுன்சிலர்கள் கவனிப்பு, ஒத்து வராதவர்களை கடத்துதல் என, இன்னும் நிறைய கூத்துக்கள் நடக்கவிருக்கிறது.
ஆக, நகர்ப்புர உள்ளாட்சித் தேர்தலில், அரசியல் கட்சியினரால் ஜனநாயகம் காலில் போட்டு மிதிக்கப்பட்டிருக்கிறது.
- ஊர்நாட்டான்
Be First to Comment