கோவையில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை திமுகவினரின் போஸ்டர் விவகாரம் தொடர்பாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை அவினாசி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பால தூண்களில் 10 கிலோமீட்டர் தூரம் வரை திமுக அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து அக்கட்சியினர் போஸ்டர் ஒட்டி இருந்தனர். இந்த போஸ்டரால் பெரும் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் நேற்றைய முன் தினம் பாஜகவினர் சுதந்திர தின விழாவையொட்டி அதே மேம்பால தூண்களில் போஸ்டர் ஒட்ட முயன்றனர் அப்போது திமுகவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதை தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மேம்பாலத் தூண்களில் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர்களை அகற்றக் கோரி கொடிசியா மைதானம் முன்பு பாஜகவினர் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதே பகுதியில் திமுகவினர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து திமுக போஸ்டர்களை பாஜகவினர் கிளித்தனர். இதனால் அங்கு சலசலப்பு நிகழ்ந்தது. பின்னர் போலீசார் பாஜகவினரை கைது செய்தனர். பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவதற்கு மாநகராட்சி ஆணையர் ஏற்கனவே தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது
Be First to Comment