தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகளில் `பி.ஓ.எஸ்’ என்கிற கருவி மூலம் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் பதியப்பட்டு, உணவுப்பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன. பழைய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அந்தக் கருவிகள் அடிக்கடி செயலிழந்துவிடுவதால் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் உணவுப் பொருள்கள் கிடைக்காமல் பாதிப்பு ஏற்படுவதுடன், கடை ஊழியர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
கோவையில் இன்று காலை முதல் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவுப்பொருள்களை விநியோகம் செய்ய ‘பாயின்ட் ஆஃப் சேல்’ எனப்படும் பி.ஓ.எஸ் கருவிகள் வேலை செய்யவில்லை. குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் ஸ்கேன் செய்யப்படும் பி.ஓ.எஸ் கருவிகளும், அதனுடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் கருவிகளும் அடிக்கடி செயலிழந்துபோவதுதான் தற்போது பிரச்னையாக உருவெடுத்துள்ளது. மக்கள் பலருக்கும் இந்தக் கருவிகள் பற்றிய தெளிவு இல்லாததால், பணியாளர்கள்தான் பொருள்களைக் கொடுக்க மறுப்பதாக நினைத்துக்கொண்டு பிரச்னை செய்கிறார்கள்.
ஊழியர்களிடம் பேசினால், “தினமும் இதே பிரச்னைதான் சார். கருவி வேலை செய்யலைன்னா அடுத்த நாள் வரச்சொல்லுவோம். அதுக்கு எங்களைத் திட்டிக்கிட்டே போவாங்க. அதேசமயம் வயசானவங்க வந்தா, அலைக்கழிக்கக் கூடாதுனு ப்ராக்ஸி முறையில கொடுப்போம். ப்ராக்ஸி முறையில கொடுத்த டீடெயில்ஸ் எங்க மேலதிகாரிகளுக்கும் டிஸ்ப்ளே ஆகும். அவங்க அடுத்த நாள் ஆய்வுக்கு வந்து, எங்களுக்கு அபராதம் போடுவாங்க. அதிகாரிகள், பொதுமக்கள்னு ரெண்டு பக்கமும் நாங்க இடி வாங்குறோம்…” என்றார்கள்.
தொடர்ந்து ரேசன் பொருட்கள் பெறுவதில் பிரச்சனை என்பது உறுதியாகத் தெரிகிறது. என்ன பிரச்னை என்பதை மறைக்காமல், அதற்கான தீர்வை நோக்கிச் சரி செய்ய வேண்டாமா?

கோவையில் ரேசன் கடைகளில் செயலிழந்த பி.ஓ.எஸ் கருவிகள்… அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்…
by
Tags:
Leave a Reply