கோவை அரசு மருத்துவமனையில் நர்சுகள் பற்றாக்குறை இருப்பதாகக் கூறி டீன் அலுவலகம் முன்பு நர்சுகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளையில், அரசு மருத்துவமனைகளில் ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் கூறப்படுகிறது. கோவை அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான செவிலியர்கள் கொரோனா வார்டில் பணிபுரிவதால், இதர நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டுகளில் போதுமான எண்ணிக்கையில் செவிலியர்கள் இல்லாததால், தற்போது பணியாற்றி வரும் செவிலியர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையே இன்று காலை அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான நர்சுகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூடுதல் நர்சுகளை உடனே நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த மருத்துவமனை முதல்வரிடம் அவர்களது கோரிக்கையை முன்வைத்தனர். தங்களது கோரிக்கைகள் அரசு கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று முதல்வர் உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஏற்கனவே பயிற்சி மருத்துவர்கள் தங்கும் வசதி மற்றும் உணவு சரியில்லை என போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. பயிற்சி மருத்துவர்களை தொடர்ந்து நர்சுகளின் இந்த திடீர் போராட்டத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
Be First to Comment