கோவை உக்கடம் பகுதியில் ஆளுநருக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். போலீசார் போஸ்டர்களை அகற்றி வழக்குப்பதிவு செய்தனர்.
கோவையில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று கோவை வந்தடைந்தார்.
இந்நிலையில் ,சில தினங்களுக்கு முன்பு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்ய வேண்டுமென தமிழக ஆளுநர் கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவை வந்துள்ள ஆளுநருக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
அவர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் “பாப்புலர் ஃப்ரெண்ட் குறித்து அவதூறாக பேசிய தமிழக ஆளுநரை வன்மையாக கண்டிக்கிறோம். ஆளுநரே அவதூறு குற்றச்சாட்டை உடனடியாக திரும்ப பெறு. ஆர்.எஸ்.எஸ் க்கு ஆதரவாக மக்கள் இயக்கங்கள் மீது வன்மத்தை காட்டாதே. ஒன்றிய அரசே தொடர்ந்து தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவியை உடனடியாக திரும்பப் பெறு” என்ற போஸ்டரை ஒட்டியுள்ளனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் போஸ்டரை அகற்றி வருகின்றனர்.
Be First to Comment