மேலும் அவர்கள் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.கோவை மாநகராட்சி பகுதியில் 6 குளங்கள் உள்ளன. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் இந்த குளங்களை மேம்படுத்தி அழகிய பூங்காக்கள், அலங்கார விளக்குகள், காட்சி கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக கோவை உக்கடம் குளம் புனரமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. இங்கு தினமும் காலை நேரத்தில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். மாலை அந்ததும் ஏராளமான பொதுமக்கள் இங்கு குவிந்து பொழுது போக்கி மகிழ்கின்றனர்.அங்கு வரும் பொதுமக்களை குஷிப்படுத்த படகு சவாரி தொடங்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து முதற்கட்டமாக, மாநகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் உக்கடம், பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தில் படகு சவாரி கடந்த மாதம் முதல் தொடங்கப்பட்டது. இதில் பெரிய குளத்தில் வாட்டர் ஸ்கூட்டர், அதிவேக மோட்டார் படகு, சைக்கிள் படகு, துடுப்பு படகு, மோட்டார் படகு ஆகியவை உள்ளன. வாலாங்குளத்தில் மோட்டார் படகு மற்றும் மிதி படகுகள் உள்ளன. இதனைத்தொடர்ந்து வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை கால விடுமுறை நாட்களில் ஏராளமான பொதுமக்கள் இந்த குளங்களில் குவிந்து வருகின்றனர்.மேலும் மாலை நேரங்களில் தங்களது குடும்பத்தினருடன் குஷியாக படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.

கோவையை பொறுத்தவரை மிகக்குறைந்த பொழுதுபோக்கு இடங்களே உள்ளன. வ.உ.சி. உயிரியல் பூங்கா பொழுதுபோக்கு இடமாக விளங்கியது. ஆனால் தற்போது அது மூடப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் வேறு இடங்களுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் ஸ்மார்ட் சிட்டி குளங்களில் அதிகளவு குவிந்து வருகின்றனர்.இங்கு நுழைவு கட்டணம் கிடையாது. அதே நேரத்தில் சிறுவர்கள் விளையாடவும், சுற்றி பார்க்கவும் ஏராளமான வசதிகள் உள்ளன. விருப்பப்பட்டால் படகு சவாரி செய்து மகிழலாம். எனவே குறைந்த செலவில் சிறந்த பொழுதுபோக்கு மையங்களாக இந்த ‘ஸ்மார்ட் சிட்டி’ குளங்கள் உள்ளன.
Be First to Comment