கோவை குற்றால அருவியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் மறு அறிவிப்பு வெளியாகும் வரை சுற்றுலா பயணிகள் வருவதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, கடந்த 6 மாதங்களாக கோவை குற்றாலம் மூடப்பட்டிருந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதன் காரணமாக கடந்த 6ஆம் தேதி கோவை குற்றாலம் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்காக, கோவை குற்றாலத்திற்கு படையெடுத்தனர். அதிகளவு பொதுமக்கள் வருகை தந்ததால் கால இடைவெளி விட்டு சுற்றுலா பயணிகளை அருவிக்கு செல்ல அனுமதி வழங்கினர்.
கேரள மாநில மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கோவை குற்றாலத்தில் தற்போது வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து இருந்தனர்.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, மறு அறிவிப்பு வெளியாகும் வரை கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
Be First to Comment