ஜல்லிக்கட்டு போட்டியால் கோவையில் நாட்டு மாடு வளர்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கோவை ஜல்லிக்கட்டு சங்க தலைவரும், நல்லறம் அறக்கட்டளையின் தலைவருமான சமூக ஆர்வலர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் வரும் 21ஆம் தேதி ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. செட்டிபாளையம் பைபாஸ் சாலை அருகே உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில் அங்கு கேலரி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கோவை ஜல்லிக்கட்டு சங்க தலைவரும், நல்லறம் அறக்கட்டளையின் தலைவருமான எஸ்.பி.அன்பரசன் அங்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவையில் வெற்றிகரமாக நான்காவது ஆண்டு ஜல்லிக்கட்டு திருவிழா வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் தான் பிரம்மாண்டமான முறையிலும் பாதுகாப்பான முறையிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அதேபோல் கோவை மாவட்டத்தில் தான் அதிக அளவில் பரிசு பொருட்களும் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இங்கு மருத்துவ வசதிக்காக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை மூலமாக நவீன தற்காலிக மருத்துவமனை நிறுவப்பட உள்ளது. மாடுபிடி வீரர்களுக்கு, சிறந்த மாடுகளுக்கு தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

முதல் பரிசாக சிறந்த மாடுபிடி வீரருக்கும் மற்றும் சிறந்த காளைக்கும் மாருதி கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 12 ஆயிரம் பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கலாம். 750 மாடுபிடி வீரர்கள், 1000 காளைகள் பங்கேற்க உள்ளன. கடந்தாண்டு மொத்தம் 970 காளைகள் கலந்து கொண்டன.
கொரோனா பரிசோதனைகள் முடிந்து சான்றிதழ் வைத்திருக்கும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். கடந்தாண்டு கோவையில் இருந்து மட்டும் 350காளைகள் பங்கேற்றன. உள்ளூர் காளைகளுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இலவச உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதால் கோவையில் நாட்டு மாடு வளர்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. முதலாமாண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் 50 காளை கூட கோவையில் இருந்து பங்கேற்கவில்லை. தற்போது அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கோவை ஜல்லிக்கட்டு சங்க செயலாளர் தங்கவேல், துணை தலைவர்கள் நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ சின்ராஜ், நிர்வாகிகள் ஜல்லிக்கட்டு சுரேஷ், ரங்கசாமி எஸ்.ஆர்.அர்ஜூனன், கணேசமூர்த்தி, கண்ணன், உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Be First to Comment