கோவை வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் படகு சவாரி துவங்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கட்டணம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளம் குமாரசாமி மற்றும் செல்வம்பதி குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் உக்கடம் பெரிய குளத்தின் கரையின் மீது நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கைகள், நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்தவெளி அரங்கம், விளையாட்டுத் திடல், உணவுக்கூடங்கள், படகுத்துறை, மிதவை உணவகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

வாலாங்குளத்தின் கரையானது ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கு படகு சவாரி துவங்கப்பட்டுள்ளது. பெடல் படகுகள், துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் மற்றும் சைக்கிளிங் படகுகள் என மொத்தம் 20 படகுகள் இயக்கப்படுகின்றன. பெடல் படகு 2 பேர் செல்லும் வகையிலும், 4 பேர் செல்லும் வகையிலும் உள்ளது. துடுப்பு படகு 4 பேர் செல்லும் வகையில் உள்ளது. மோட்டார் படகு 8 பேர் செல்லும் வகையில் உள்ளது. சைக்கிளிங் படகில் ஒருவர் செல்லலாம்.

பெடல் படகுகளை பயன்படுத்த 30 நிமிடங்களுக்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. துடுப்பு படகிற்கு ரூ.350, மோட்டார் படகுகளுக்கு ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தில் தற்காலிகமாக 20 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், படகு சவாரி செல்வோர் தங்கள் செலுத்தும் கட்டணத்தைப்போலவே மற்றொரு மடங்கு டெபாசிட் தொகையையும் செலுத்த வேண்டும். குறித்த நேரத்திற்குள் திருமாவிட்டால் டெபாசிட் தொகை பிடித்தம் செய்யப்படும். இதனிடையே படகு சவாரிக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதாகவும், ஊட்டி போன்ற சுற்றுலாத்தலங்களில் வசூலிக்கப்படுவதை விட அதிகமாக இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கட்டணம் அதிகமாக இருப்பதால் சாமானிய மக்கள் படகு சவாரி செல்ல முடியவில்லை என்றும், கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Be First to Comment