பல்வேறு சமூக பணியில் ஈடுபட்டு வரும் அலர்ட் எனும் சமூக தொண்டு அமைப்பு அவசர காலத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றுவதற்கான பயிற்சியை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில், கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான துவக்க விழா பி.எஸ்.ஜி.மருத்திவமனை வளாக அரங்கில் நடைபெற்றது. அலர்ட் அமைப்பின் தலைவர் வி.எம். முரளிதரன் மற்றும் பி.எஸ்.ஜி குழும கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில், சிறப்பு விருந்தினர்களாக, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகர காவல்துறை ஆணையர் தீபக் தாமோர் மற்றும் அத்வைத் லக்ஷ்மி இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் ரவி சாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் உள்ளிட்ட உட்பட தமிழகத்தின், மேற்கு மாவட்டங்களில் உள்ள பொது மக்களுக்கு அவசர காலங்களில் எவ்வாறு செயல்பட்டு உயிரை காப்பது என்பது குறித்த பயிற்சியை அலர்ட் அமைப்பு வழங்க உள்ளது.
பி.எஸ்.ஜி குழும கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கும் அவசர மருத்துவ மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது குறிப்பிடதக்கது. நிகழ்ச்சியில், அலர்ட் நிறுவனர் கலா பாலசுந்தரம் மற்றும் இணை நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான ராஜேஷ் திரிவேதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Be First to Comment