கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் உத்தரவின் பேரில் இந்து அமைப்புகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மூன்றாவது மாடி கூட்டரங்கில் கோவையில் உள்ள இந்து முன்னணி, பாரத் சேனா, இந்து மக்கள் கட்சி உட்பட 10 -க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் இடம் கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் வரக்கூடிய விநாயகர் சதுர்த்தி விழா குறித்தும் அதற்கு இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தமிழக அரசு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்துள்ளது. இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியை மிகவும் விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம்.
அனைவரது வீடுகளிலும் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டு, வீதிகளில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு, முக்கிய விநாயகர் கோவில்களில் மிகப் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு 3 நாட்களுக்கு தொடர்ந்து பொதுமக்கள் அபிஷேக ஆராதனை செய்து பூஜைகள் செய்யப்பட்டு பிறகு அவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஊரின் முக்கிய வீதிகளில் கடந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அந்தப் பகுதியில் உள்ள குளங்களில் ஆறுகளில் ஏரிகளில் விநாயகர் சிலை கரைப்பது வழக்கம்.
இந்த ஆண்டு அதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து பொது மக்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்காக இந்து அமைப்பினர் உடன் போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் பல்வேறு விதமான கருத்துக்களைக் கேட்டு அரசு கூறியுள்ள விதிமுறைகளை விளக்கமாக எடுத்துக் கூறி அனைவரும் ஒன்றாக இணைந்து அமைதியான முறையில் வீட்டில் வைத்து விநாயகரை வழிபட வேண்டும்.
சட்டம் ஒழுங்கிற்கு எந்தவிதமான பாதிப்பும் இன்றி காவல்துறையுடன் இணைந்து அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டு இந்து அமைப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இதில் குற்றப்பிரிவு, சட்டம் ஒழுங்கு துணை ஆணையர்கள் உட்பட உயர் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Be First to Comment