என்ட்ரி ஆனார் குறிச்சியார். ”சென்ற முறை அவசர அவசரமாக சென்றீரே என்ன விஷயம்?” கேள்விகளால் முந்தினோம்.
”அதிகாலையும், இரவிலும் டாஸ்மாக் அருகே சிலர் சரக்குகளை இன்னும் கள்ளத்தனமாக விற்பனை செய்கின்றனராம்.” இது தொடர்பாகதான் என்னை அழைத்தார்கள். நானும் போலீஸாரிடம் தகவலை சொல்லியுள்ளேன்.
”நடவடிக்கை எடுத்தார்களா?”
எடுப்பதாக சொல்லியுள்ளனர் என்றவர், டேபிளில் இருந்த இந்த வார கவர் ஸ்டோரியை படித்துவிட்டு நிமிர்ந்த குறிச்சியார். ”மண்டல தலைவர் செலக்ஷன், பொறுப்பாளர்கள் மீது ஆக்ஷன்…” என அதிரடிகளை செய்து கோவையில் தி.மு.கவை மேலும் வலுவாக்கும் முடிவில் இருக்கிறாராம் அமைச்சர் செந்தில்பாலாஜி.
”விவரமாகச் சொல்லும்?”

மேயர், துணை மேயர் பதவியேற்றுக் கொண்ட நிலையில், தற்போது கோவை மாநகராட்சியில் 5 மண்டல குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்ற தி.மு.கவினரிடையே கடும் போட்டி நிலவுகிறதாம். இதில் ஒருசிலர் எப்படியும் மண்டல தலைவர் பொறுப்பை
”வாங்கி” விட துடித்துக் கொண்டு இருக்கின்றனராம்.
ஏற்கெனவே மேயராக தங்கள் குடும்பத்தினருக்கு கேட்டு அழுத்தம் கொடுத்துக் கிடைக்காததால், மண்டல குழுத்தலைவர் பதவி கேட்கிறாராம் மாவட்ட பொறுப்பாளர் ஒருவர். மற்றொரு மாவட்டமோ மண்டல தலைவர் பதவியை விரும்பவில்லையாம். இதற்கிடையில், தி.மு.க-வின் மூத்த முன்னோடியும், முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்களும், உறவினர்களும் மண்டல குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்றத் தீவிரம் காட்டுகின்றனராம்.
அதுமட்டுமின்றி கோவையின் இரு பெரும் சமூகத்திற்கு மேயர் மற்றும் துணை மேயர் கொடுக்கப்பட்ட நிலையில், மற்ற சமூகத்தினர் மற்றும் இஸ்லாமியர்களும் மண்டல தலைவருக்கான வாய்ப்பை எதிர்பார்க்கின்றனராம்.
”பாவம்!”
சூடாக வந்த கரம் மசாலா டீயை உறிஞ்சிக் குடித்த குறிச்சியார், செய்தியாடலைத் தொடர்ந்தார் –
இன்னொரு பக்கம், ஐந்து மண்டலங்களிலும் நிலவும் பொதுமக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க திறமையும், அனுபவமும் உள்ளவர்களுக்கு இந்த மண்டல குழுத் தலைவர் பதவி வழங்க வேண்டும். வசதி படைத்தவர்களுக்கும், ”சாதி” லாபி செய்பவர்களுக்கும் பதவி வழங்கப்படக் கூடாது. கட்சியினரை மதிக்காமல் சொந்தங்களை மட்டும் உடன் வைத்து செயல்படும் சிலருக்கு இந்த முறை வேட்பாளராகும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டது. அமைச்சரின் தயவால் வெற்றியும் பெற்று விட்டனர்.
அப்படிப்பட்டவர்கள் இன்னும் அ.தி.மு.கவினருடன் ரகசிய தொடர்பில் இருக்கத்தான் செய்கின்றனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு மேயர் மற்றும் துணை மேயர் போன்று கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என எதிர்பாக்கின்றனராம் கோவை தி.மு.க தொண்டர்கள்.

”தி.மு.க-வினரின் இந்தத் கோரிக்கையை தலைமை கவனம் செலுத்துமா?”
சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்து வரும் 26ந் தேதிக்கு பின்னர்தான் அமைச்சர் செந்தில்பாலாஜி இதில் தீவிர கவனம் செலுத்துவாராம். மண்டல தலைவர்கள் மற்றும் நிலைக்குழு தலைவர்கள் தேர்வுக்கு பின்னர் கட்சியில் பலர் களை எடுக்கப்படுவார்களாம்.
”அதாவது…?”
”பதவிக்காகவும், பணத்திற்காகவும் மட்டும் கட்சியில் வேலை செய்யும் நபர்கள் வேறு, தன் வளர்ச்சியுடன் கட்சியையும் வளர்க்க நினைக்கும் நபர்கள் வேறு என்பதில் தி.மு.க முன்னணி தலைவர்கள் எப்பவுமே தெளிவாக இருப்பார்கள். அந்தத் தெளிவு அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இருக்கிறது”.
என சொல்லி முடித்த அடுத்தகணம் குறிச்சியார் கிளம்பினார்.
Leave a Reply