வெள்ளலூர் குப்பை கிடங்கு வழக்கு பதிவு செய்தவரும், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான வே.ஈஸ்வரன் தென் மண்டல பசுமை தீர்ப்பாய கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி ஜோதிமணியிடம் முன்வைத்துள்ள கேள்விகள் மற்றும் கோரிக்கையில், வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்றக்கோரி 2013 ஆம் ஆண்டு பசுமை தீர்ப்பாயத்தில் நான் வழக்கு தொடர்ந்தேன். அதன் பயனாக 2018 ஆம் ஆண்டு பசுமை தீர்ப்பாயம் தனது மேலான தீர்ப்பை வழங்கியது.அதன்படி, வெள்ளலூர் குப்பை கிடங்கில் திறந்தவெளியில் கொட்டப்பட்டு கிடக்கின்ற 15.5 லட்சம் கன மீட்டர் குப்பைகளை ஒரு வருடத்திற்குள் பயோ மைனிங் முறைப்படி பிரித்து அழித்து விடுவதாக மாநகராட்சி உறுதி அளித்தது.ஆனால் தற்போது வரை தீர்ப்பு வந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் கொட்டப்பட்டுள்ள பழைய குப்பைகள் 4 லட்சம் கன மீட்டர் அளவு மட்டும் அழிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக உள்ள பழைய குப்பைகளில் 9.4 லட்சம் கன மீட்டர் குப்பைகளை அழிப்பதற்காக மட்டுமே திட்டம் தீட்டப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.அதில் 40 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. தற்போது குப்பை மேலாண்மை செய்து வரும் தனியார் நிறுவன வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள 6.1 லட்சம் கன மீட்டர் குப்பைகளை அழிப்பதற்கு இதுவரை எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.இது மட்டுமில்லாமல் கடந்த 4 வருடங்களில் நாள் ஒன்றுக்கு 450 டன் குப்பைகள் திறந்தவெளியில் விதிகளுக்கு புறம்பாக கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் மட்டும் கடந்த நான்கு வருடங்களில் 6 லட்சம் டன் குப்பைகள் புதிதாக சேர்ந்துள்ளது.புதிதாக சேர்ந்த குப்பைகளையும் சேர்த்தால் தீர்ப்பு வந்த தினத்தன்று வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்த 15.5 லட்சம் கன மீட்டர் குப்பைகளை விட மொத்தமாக 2 இலட்சம் டன் குப்பைகள் அதிகமானதே ஒழிய குறையவில்லை.

மாநகராட்சியின் மெத்தன போக்கால் சுற்றி இருக்கின்ற 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடும் துன்பத்திற்கு உள்ளாகின்றார்கள்.மொத்தமாக பார்த்தால் பசுமை தீர்ப்பாயத் தீர்ப்பை மாநகராட்சி முறையாக அமல்படுத்தாத காரணத்தால் பசுமை தீர்ப்பாய தீர்ப்பினால் எந்த பலனும் இதுவரை கிடைக்கவில்லை.வெள்ளலூரில் தினந்தோறும் திறந்தவெளியில் கொட்டப்படுகின்ற 450 டன் குப்பைகளை மேலாண்மை செய்வதற்கான எந்த திட்டமும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. உடனடியாக இதற்கான திட்டத்தையும் மாநகராட்சி அறிவிக்க வேண்டும். மாநகர முழுவதும் 65 நுன் உர தயாரிப்பு மையங்களை ( mcc ) உருவாக்கி அதன் மூலம் வெள்ளலூருக்கு வருகின்ற அதிகப்படியான குப்பைகளை தடுத்து விடுவதாகவும், மாநகராட்சி உறுதி அளித்தது.ஆனால் அதில் 35 மையங்கள் மட்டுமே தற்போது நிறுவப்பட்டு அதிலும் ஒரு சில மையங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அளித்த இந்த உறுதி மொழியும் காப்பாற்றப்படவில்லை.மொத்த மையங்களில் 30 க்கும் மேற்பட்ட மையங்களை அமைக்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற காரணத்திற்காக அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக மாநகராட்சி தெரிவிக்கிறது.அனைத்து MCC களையும் நான்கு மாதத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து விடுவதாக மாநகராட்சி பசுமை தீர்ப்பாயத்தில் உறுதி அளித்தது.பல இடங்களில் செயல்படுத்த இயலாத சூழ்நிலை வந்த போது வெள்ளலூருக்கு கொண்டு சென்று திறந்தவெளியில் கொட்டப்படுகின்ற குப்பைகளை மேலாண்மை செய்வதற்கு உடனடியாக மாற்றுத்திட்டத்தை அமல்படுத்தி இருக்க வேண்டும்.தற்போது அமைக்கப்பட்டுள்ள 35 MCC முழுமையாக செயல்பட்டாலும் கூட வெள்ளூரில் திறந்தவெளியில் கொட்டப்படுகின்ற 450 டன் குப்பைகளை பெருமளவில் குறைத்து விட முடியாது. அதனால் வெள்ளலூருக்கு வருகின்ற குப்பைகளை குறைப்பதற்கான மாற்றுத்திட்டத்தையும் மாநகராட்சி உடனடியாக செயல்படுத்த முன் வர வேண்டும்.
தற்போது வெள்ளலூரில் இயங்கி வருகின்ற தனியார் குப்பை மேலாண்மை மையத்துக்கு வருகின்ற குப்பைகள் தரம் பிரித்து வருவதில்லை பிரிக்காத குப்பைகளை தான் மேலாண்மை செய்கிறார்கள் வீடு வீடாக பிரித்து வாங்கினாலும் கூட வெள்ளலூருக்கு வரும்போது குப்பைகள் கலந்து தான் வருகின்றது இதனை முறைப்படுத்த வேண்டும். மாநகர முழுவதும் பல இடங்களில் சாலை ஓரத்தில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன குப்பைத்தொட்டிகளே இல்லாத நகரத்தை உருவாக்குவதாக இதற்கு முன் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனாலும் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.அந்த குப்பைத்தொட்டிகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து போடுகின்ற வகையில் வைக்கப்படவில்லை. குப்பைகளை தரம் பிரித்து மேலாண்மை செய்வதில் கோவை மாநகராட்சியின் செயல்பாடுகள் மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கான முழுமையான திட்டத்தையும் மாநகராட்சி அறிவித்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.வெள்ளலூருக்கு குப்பைகளை கொண்டு வருகிற லாரிகள் வலை போட்டு மூடப்படாமலும் ,கழிவு பொருட்கள் சாலைகளில் பறந்து போகின்ற வகையிலும் இயங்குகின்றது. பொதுமக்கள் பாதிக்காதவாறு குப்பை வாகனங்களை முறையாக இயக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மொத்த குப்பை உற்பத்தியாளர்களிடமிருந்து குப்பை சேகரிப்பது தற்போது விதிகளை மீறி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனையும் முறைப்படுத்த வேண்டும்.அரசு அதிகாரிகள், பொதுநல அமைப்பினர்,அரசியல் இயக்கங்கள், பொதுமக்கள் ஆகியோரை இணைத்து வெள்ளலூர் குப்பை கிடங்கு கண்காணிப்பு குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.” என கூறியுள்ளார்.
Be First to Comment