விறுவிறுப்பாக வந்தமர்ந்த குறிச்சியாருக்கு சூடான இஞ்சி டீ அளித்தபடி, “மிகுந்த அலைச்சலோ!” என்றோம். டீ-யை பருகியபடி,
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்களின் கூட்டம் தெற்கு மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்ததாம். மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட உறுப்பினர்கள் சிலர் கலந்து கொள்ளவில்லையாம். அது சில அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.” என்று செய்திக்குள் நுழைந்தார் குறிச்சியார்.
”ஓஹோ… ஏற்கெனவே யாருக்கு பவர் என்பதில் இரண்டு தரப்பா இருக்கிறார்களாம்!”
”உண்மைதான், இந்த கூட்டத்தில் குறிப்பாக குடிதண்ணீர் பிரச்சனை தொடர்பாகதான் பேசியுள்ளனர். 10-லிருந்து 12-நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. அதே போல் வார்டுகளில் உள்ள பெரும்பாலான குழாய்கள் உடைந்த நிலையில் மிக மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர் மாமன்ற உறுப்பினர்கள். மேலும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் இன்னும் சரி செய்யாமல், சாலைகள் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளாராம்.”
”தெரிந்த விசயம்தானே!”
”அதுமட்டுமில்லாமல் ஆழ்குழாய் தண்ணீர் விநியோகம் சரிவர நடப்பதில்லை. பல இடங்களில் மோட்டார் பழுதாகியும் மற்றும் குழாய்கள் உடைந்தும் இருப்பதால் அதனை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனராம். இப்படி மக்கள் பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க, ஒரு மாமன்ற உறுப்பினரின் செயல் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திடும்படி இருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர் சொந்த கட்சியினரே.”
”சரிதான்…”
நேற்று நடந்த கூட்டம் அறிவிக்கப்பட்ட நேரத்தில் நடக்கவில்லையென்று பேசப்பட்ட நிலையில், அறிவிக்கப்பட்ட நேரத்தில்தான் கூட்டம் தொடங்கியது. ஆனால் மக்கள் பிரச்சனைகளை பேச நேரம் ஒதுக்காமல் தனது சொந்த வேலைக்காக அவசர அவசரமாக சென்று விட்டார் ஒரு மாமன்ற உறுப்பினர். கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாததால் அவர்தான் வேண்டுமென்ற இப்படியொரு பொய்யான குற்றச்சாட்டை அவிழ்த்து விடுகிறார் என்கின்றனர் விவரமறிந்தோர்.
“ம்ம்… ஆளாளுக்கு குற்றம் சொன்னால் எப்படி?”
”இன்னும் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கட்சியினர் கூறுகின்றனர். வார்டில் தண்ணீர் பிரச்சனைகள் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் அதை விட தன் சொந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கூட்டத்தில் கலந்து கொள்ளாததை என்னவென்று சொல்வது? கூட்டம் காலதாமதமாகவே நடப்பதாக இருக்கட்டும், மக்கள் பிரச்சனைகளை பேச காத்திருப்பதில் என்ன தவறு? தேர்தலில் இவருக்காக கடுமையாக உழைத்து வெற்றி பெற வைத்தோம். ஆனால் மாமன்ற உறுப்பினரான சில நாட்களிலேயே வார்டுக்குள் கெட்டபெயரைதான் சம்பாதித்து வைத்துள்ளார். இவருக்காக ஓட்டு கேட்டோம். இப்போது மக்களை சந்திக்கவே தயக்கமாக இருக்கிறது. குறைகளுடன் அவர் வீட்டிற்கு சென்றாலோ, அல்லது போன் செய்தாலோ முறையான பதிலை சொல்வதில்லை என எங்களிடத்தில்தான் மக்கள் குமுறுகின்றனர். அதுமட்டுமின்றி ”தண்ணீர் விடும் ஒப்பந்த ஊழியர்களிடம் ‘தினமும் என்னிடம் வந்து சாவி வாங்கி செல்ல வேண்டும் எனஅதிகார தோரணையில் அவர் கூறுவதால் சிலர் இந்த வேலையே வேண்டாம் என்று முடிவில் உள்ளனர்.” என விரக்தியில் கூறுகின்றனர் அந்த வார்டைச் சேர்ந்த சொந்த கட்சியினர்.
”பெரும் பஞ்சாயத்துதான்”
”இதைவிட தெற்கு மண்டலத்தில் யாருக்கு அதிகாரம் என்ற பஞ்சாயத்தும் நடக்கிறதாம். அதை பற்றி நீ கவர் ஸ்டோரியே போடலாம். அந்த அளவிற்கு செய்திகள் படு சுவாரஸ்யமாக இருக்கும். விரைவில் அதற்கான குறிப்புகளை தருகிறேன்” என்று கிளம்பினார் குறிச்சியார்

கோவை மாநகராட்சியில் திகு திகு தெற்கு மண்டலம்
More from மிஸ்டர் குறிச்சிMore posts in மிஸ்டர் குறிச்சி »
Be First to Comment