Press "Enter" to skip to content

கோவை மாவட்ட தி.மு.க.,வுக்குள் குஸ்தியோ குஸ்தி…விபரீதமாவதற்குள் விழித்துக் கொள்வாரா செந்தில் பாலாஜி?

உள்ளாட்சித் தேர்தலில் எப்படியும் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, கட்சியினரை உசுப்பி விட்டு தேர்தலுக்கு தயார்படுத்தும் வேலையை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கொடுத்துள்ளது தி.மு.க.,தலைமை.

கோவை மாவட்ட தி.மு.க.,வுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர், மாவட்டம் முழுவதும் சுற்றிச் சுழல்கிறார். கட்சியினை எல்லா வகையிலும் திருப்திபடுத்தி, அவர்களை தேர்தல் வேலைப் பார்க்கத் தூண்டுகிறார்.

அதாவது – கோவையின் மாநகராட்சி மேயர் பொறுப்பு மட்டுமல்ல; அங்கிருக்கும் 100 வார்டுகளிலும் தி.மு.க.,வை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக, எந்நேரமும் கோவையையே வலம் வந்து கொண்டிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதற்காக மாஸ்டர் பிளான் போட்டு, அதைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
கடந்த மாதம் கோவை கொடிசியா மைதானத்தில் தி.மு.க.,வின் பூத் முகவர்கள் கூட்டம் நடந்தது. 25 ஆயிரம் பேர்களுடன், ஒரு மாநாடு போல, அந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க., இளைஞரணி செயலாளரும் சென்னை, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியையும் கலந்து கொள்ள வைத்து, உற்சாக வார்த்தைகளை அள்ளி வீச, சோர்ந்து கிடந்த தி.மு.க., மெல்ல எழுந்து நிற்கத் துவங்கி இருக்கிறது.

ஆனாலும், செந்தில் பாலாஜியின் அஸ்திரமெல்லாம் கோவையில் எடுபடுமா என்ற சந்தேகக் கேள்வியும், அவரைச் சுற்றி இருக்கும் பலரிடமும் இருக்கிறது. இருந்த போதும், கோவை மாவட்டத்தில் அசராமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் செந்தில் பாலாஜி.
கோவையில் இருக்கும் 100 வார்டுகளிலும் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் தி.மு.க., பூத் முகவர்களை ஏற்க மறுக்கின்றனர் பூத் முகவராக இல்லாத தி.மு.க., வார்டு நிர்வாகிகள். இதனால், இரு தரப்புக்கும் இடையில் ஏழாம் பொறுத்தமாக உள்ளது.
மாவட்டத்தின் பல இடங்களிலும் இரு தரப்புக்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு அடங்குவதோடு, சில இடங்களில் கைகலப்பு வரை சென்றிருக்கிறது.

தேர்தலுக்கு தி.மு.க.,வை தயார்படுத்துவதற்கென்றே, செந்தில் பாலாஜியால், கரூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் தி.மு.க., தொண்டர்கள், பூத் கமிட்டியினர் மற்றும் தி.மு.க., வார்டு நிர்வாகிகளிடையே சமரசம் செய்யும் தீவிரத்தில் உள்ளனர். இருந்தாலும், பல இடங்களிலும் இரு தரப்பாரும் சமரசத்தை ஏற்க மறுக்கின்றனர்.

கோவை மாநகராட்சி வார்டுகளின் ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 10 பேரை நியமித்து உள்ளது தி.மு.க., அவர்கள், இப்போதே ஓட்டுக் கேட்கத் துவங்கி விட்டனர். அந்த பத்து பேரும் அந்தந்த வார்டுகளில் இருக்கும் கட்சி நிர்வாகிகள்.

பூத் கமிட்டியில் இடம்பெறாத, தி.மு.க., நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், ஒவ்வொரு வார்டிலும், கணக்கெடுக்கும் பணியை பூத் கமிட்டியினர் செய்து வருகின்றனர். இது கோவை மாவட்ட கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாக கட்சியினர் புலம்புகின்றனர்.

சில வார்டுகளில் எங்களுக்கு கொடுக்க சொல்லி கொடுத்த பணத்தை வார்டு பொறுப்பாளரே வைத்து கொண்டார்கள்; எங்களுக்கு அது வரவே இல்லை என குமுறுகிறார்கள் பூத் கமிட்டியினர்.

இன்னும் சில வார்டுகளில், காலம் காலமாக இங்கிருந்து நாங்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், எங்கிருந்தோ வந்தவர்கள், எங்களையெல்லாம் புறக்கணித்து விட்டு, புதிதாக சிலரை பூத் கமிட்டிக்கு நியமித்து விட்டு, அவர்களோடு நாங்கள் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று சொன்னால், எப்படி செய்ய முடியும் எனக் கேட்டு கொந்தளிக்கின்றனர்.
பூத் கமிட்டியினர், எங்கள் அனுமதி இல்லாமல் எங்கள் வார்டுக்குள் வருவதை விரும்பவில்லை; அதை அனுமதிக்க மாட்டோம் என எச்சரிக்கும் தொனியில் பேசுகின்றனர்.

இது குறித்து, குறிச்சி 97வது வார்டு பிரதிநிதியாக இருக்கும் ஆட்டோ ராஜூ, தன்னுடைய ஆதங்கத்தை கொட்டினார்.
அவர் நம்மிடம் பேசும்போது, ”எனது பகுதியில் இருக்கும் ஓட்டுக்களை பெற, பூத் முகவர் என்ற பெயரில், வார்டுக்கு சம்பந்தமே இல்லாத நபர்களிடம் சரி பார்க்கும் பணியைக் கொடுத்துள்ளனர்.
என்னை, பூத் கமிட்டியில் போடவில்லை. நிறைய போராடியும் பூத் கமிட்டியில் போடவில்லை. நிறைய பேர் சிபாரிசும் செய்தனர்; ஏற்கவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக பூத் வேலை பார்த்த என்னைப் போன்றவர்களை வேண்டுமென்றே தவிர்த்துள்ளனர்.
நான் கட்சிக்காக நிறைய உழைத்திருக்கிறேன். கட்சியில் சீனியர். கட்சி வேலை தெரியாதவர்களையெல்லாம் பூத் கமிட்டியில் போட்டு வைத்திருப்பதெல்லாம் எவ்வளவு பெரிய தவறு என்பது, தேர்தலுக்குப் பின் தெரியவரும்.

குழப்பத்தை உண்டு செய்யும் பூத் முகவர்களை எனது பகுதியில் கணக்கெடுக்ககூடாது என விரட்டி விட்டுட்டேன். இனி, என் போன்ற கட்சியினர் அனுமதி இல்லாமல் அவர்கள் வார்டுக்குள் வர விட மாட்டோம்.
இப்படித்தான், கடந்த சட்டசபைத் தேர்தலில் ஏகப்பட்ட குழப்படிகள் கட்சிக்குள் நடந்தது. தோல்வியுற்றோம். அதே நிலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தொடருமோ என அச்சப்படுகிறேன்.

இந்த சூழல்களை அறிந்ததும், கரூரில் இருந்து வந்திருக்கும் கட்சிப் பொறுப்பாளர் ஒருவர், என்னை அழைத்து பேசினார். என்னைப் போன்ற கட்சியினரை அணுசரிக்காமல், வார்டுக்குள் அவர்களால் வேலை பார்க்க முடியாது என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லி விட்டேன். இருவரும் இணைந்து வேலை செய்யுங்கள் என சொல்கிறார். அவர்களுடன் நான் வேலை பார்க்க மாட்டேன்.

25 வருடமாக, கட்சிக்காக பூத் வேலை பார்த்த என்னைத் தேடி அவர்கள் வரட்டும். கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இல்லையென்றால், இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். மாவட்ட பொறுப்பாளர் அல்லது பகுதி பொறுப்பாளர் என யாரை கூட்டிக் கொண்டு வந்தாலும், என்னைப் போன்ற கட்சியினரின் முடிவு இதுதான்.

பிறந்ததில் இருந்து தி.மு.க-., தான் எங்கள் அடையாளம். எதிர்முகாம் ஓட்டுக்களை, தி.மு.க.,வுக்கு மடை மாற்றும் வல்லமையும் எங்களைப் போன்றவர்களுக்குதான் உண்டு. எங்களை போன்றோரை அவமானப்படுத்தி விட்டு, புது முயற்சியாக எதைச் செய்தாலும், அது தி.மு.க.,வுக்குத்தான் இழப்பு” என்றார் படு காட்டமாக.

கட்சிக்குள் இப்படிப்பட்ட குழப்பங்கள் இருப்பது தெரியாமலேயே, கோவை மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் அமைச்சர் செந்தில்பாலாஜி, தான் நினைத்தையெல்லாம் செயல்படுத்த ஓடோடிக் கொண்டிருக்கிறார். ஆனால், முடிவு எப்படி இருக்கும் என்பதுதான் தெரியவில்லை. செய்திக்குப் பிறகாவது, செந்தில் பாலாஜி விழித்துக் கொண்டால் ஏமாற்றத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது.

பூத் முகவர் யார்?; அவர் பணி என்ன?

ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களுடைய வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான், அதிக அக்கறை எடுத்துக் கொள்வர்.

வெற்றிக்கு பங்கம் வரும் வகையில், எந்தவித முறைகேடும் தேர்தல் சமயங்களில் நடந்துவிடக் கூடாது என்பதை கவனித்து, தவறு நடக்காமல் செய்ய வேண்டியது பூத் முகவர்கள் பணி. இதற்கான அதிகாரம், இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிறது.

பூத் முகவருக்கு, ஓட்டுப் போடும் இயந்திரம் பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும். ஓட்டுச் சாவடிக்கு உள்ளே ஒருவரும், வெளியே ஒருவருமாக இருந்து, ஓட்டுப் போடுவதை பூத் முகவர்கள் கவனிப்பர். வெளியே கூடுதலாக ஒரு பூத் முகவரை, வேட்பாளர்களாக இருப்போர் நியமித்துக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட பூத் அமைந்திருக்கும் பகுதியின், மொத்த வாக்களார் பட்டியல் நகல், பூத் முகவர்களிடம் இருக்கும். அதனால், ஓட்டளிக்க வருபவர்கள் சரியான நபர்தானா, அவர் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தவர் தானா என்பதையெல்லாம், பூத் முகவர்கள், தங்கள் கையில் இருக்கும் வாக்காளர் பட்டியல் மூலம் சரி பார்ப்பர்.

இப்படி தேர்தல் நேரத்தில் அதி முக்கியத்துவத்துடன் வலம் வரும் பூத் முகர்களுக்கு தேர்தல் நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில், கட்சியில் எந்த முக்கியத்துவமும் இருக்காது.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks