Press "Enter" to skip to content

கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் கைது. கைதை கண்டித்து பீளமேட்டில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற, பா.ஜ.க தொண்டர்கள்!

கோவையில் நடைபெற்ற இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க எம்.பி ஆ.ராசாவுக்கும் , தி.மு.க.,வினருக்கும் பகிரங்க மிரட்டல் விடுத்த பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனாதன தர்மம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, இந்து முன்னணி சார்பாக பீளமேடு பகுதியில் கடந்த ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி பேசும்போது..,

“ஆ.ராசா தைரியம் இருந்தால் காவல் துறையினர் பாதுகாப்பு இல்லாமல் கோவையில் கால் எடுத்து வைக்கட்டும் பார்க்கிறேன். தி.மு.க.காரனும் வாங்காட பார்க்கலாம். இந்து சனாதன தர்மத்தை உடைக்கிறேன். மயிரை உடைக்கிறேன் என்கிறார்கள். எவனாவது வந்தால் பிஞ்ச செருப்பால் அடிப்பேன். வளர்த்த மகளை திருமணம் செய்தவனை தலைவன் எனச்சொல்வதா, வீட்டில் எதுக்கு மனைவி, அம்மாவை வைத்திருக்கிறீர்கள். திமுக.வினர் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று பேசி உள்ளார். பாலாஜி உத்தம ராமசாமியின் இந்த பகிரங்க மிரட்டல் சமூக வலைதலங்களில் வைரலானது.

இதனையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக, தமிழக முதல்வர், தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசியதோடு, பயங்கர மிரட்டல் கொடுத்த பாஜக மாவட்டத்தலைவர் உத்தம ராமசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நேற்று புகாரளிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை பீளமேடு காவல் துறையினர் பாலாஜி உத்தம ராமசாமியை கைது செய்தனர். மேலும் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதை அறிந்த பா.ஜ.க தொண்டர்கள் பீளமேடு காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாலாஜி உத்தமராமசாமி “ஒரு மதத்தை குறித்து பேசியவரை கண்டிக்காமல் உள்ளனர்.

நான் என்ன தவறாக பேசினேன் என்பதை நிரூபிக்கவும். இதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன். நான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் எனவும், சகோதரிகளை, தாய்மார்களை பழித்து பேசியவர் எவனா இருந்தாலும் சும்மா விடமாட்டேன் என்று தெரிவித்தார். காவல்துறையினர் அவர்களை காவல் நிலையம் உள்ளே அனுமதிக்காமல் இரும்பு பேரி கேட்டுகளை வைத்து தடுத்து நிறுத்தினர். விசாரணையை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக பாலாஜி உத்தம ராமசாமி தனியார் வாகனத்தில் காவல் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டார். அப்போது காவல் நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த பா.ஜ.க,.,வினர் அவரை வெளியே விடாமல் தடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தள்ளுமுள்ளுகளுக்கு இடையே உத்தம ராமசாமி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து பா.ஜ.க.,வினர் அவினாசி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தியதை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பாலாஜி உத்தம ராமசாமி கோவை ஜே.எம் 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது இரு தரப்பினரிடையே மோதலை உருவாக்கும் விதமாக பேசுதல் (153 ஏ), மற்றும் ஐ.பி.சி 504, 505 என்ற மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நிதிபதி செந்தில், பாலாஜி உத்தம ராமசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks