தமிழ் சினிமாவில் இன்று வெளியாகியுள்ள ‘வாய்தா’ என்ற திரைப்படத்தில் நீதிமன்ற மாண்பை குலைக்கும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்று உள்ளதாகவும் அவற்றை நீக்க வலியுறுத்தியும் கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் வாய்தா என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. மகி வர்மன் என்ற இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்தில் நாசர் புகழ் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் நீதிமன்ற மாண்பை குலைக்கும் வகையிலும், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளின் மனம் புண்படுத்தும் வகையிலும் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பணக்காரர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் ,ஏழைகளுக்கு உரிய நீதி கிடைக்காது என்னும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே படத்தில் நீதிமன்ற மாண்பை குறைக்கும் வகையில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், படக்குழு அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தணிக்கை சங்கத்தினர் உடன் கலந்து பேசி இது தொடர்பாக புகார் அளிக்க உள்ளதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
Be First to Comment