குறிச்சியாருக்காக வாங்கி வந்திருந்த சமோசா பொட்டலங்களைத் திறந்தோம்… உள்ளே மெதுவடை இருந்தது. ‘‘பாக்கெட் மாறிவிட்டதே… வாங்கும்போதே கவனித்திருக்கலாம்” என்று நாம் முணுமுணுத்தை கவனித்த குறிச்சியார், ‘‘அனுபவமே பாடம்…’’ என்று கமென்ட் அடித்தார்.
”நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த பேராசிரியர் கல்யாண சுந்தரம் கடந்தாண்டு அ.தி.மு.கவில் இணைந்தாரல்லவா. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பெரிதாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லையாம்.”
இதற்கிடையில் ”ருத்ரதாண்டவம்” சிறப்பு காட்சியின் போது பா.ஜ.கவின் ராதாரவியுடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தினை அவர் தனது முகநூலில் பதிவிட்டு இருந்தார். அதனை வைத்து நாம் தமிழர் கட்சியினர் ஏகத்திற்கும் கேலி பேசுகின்றனராம். கல்யாணசுந்தரம் அ.தி.மு.கவிற்கு போகாமல் நேராகவே பா.ஜ.கவிலேயே சேர்ந்து இருக்கலாம் என்றும், ஆதிக்க சிந்தனை இப்போதுதான் வெளிப்படுகிறது என்றும் பல்வேறு கமெண்ட்களை போட்டு தாக்குகிறார்களாம்.

கொங்கு மண்டலத்தின் அண்ணாமலை பா.ஜ.கவின் தலைவராக இருக்கும் நிலையில் கோவையில் கல்யாணசுந்தரத்தம் வந்தால் நல்லதுதான் என பா.ஜ.கவில் உள்ள ஒரு தரப்பினர் விரும்புகிறார்கள்.
ஓ…அப்ப இணைப்பு நாள் குறிச்சாச்சா?
ஆமாம், அப்படிதான் சேதிகள் கசிக்கின்றன. மாநகராட்சி தேர்தலில் இந்த முறை கோவை மேயர் வேட்பாளருக்கு கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு முக்கியத்துவம் இருக்குமாம். அதனாலேயே இப்படியொரு கணக்கு போடுகின்றனராம் பலரும்.
மேயர் வேட்பாளர் கணக்கில் கல்யாணசுந்தரமா?
இருக்கலாம். நான் சொல்ல வந்தது பொள்ளாச்சிக்காரரை. மையத்திலிருந்து வந்தவருக்கு எதிர்ப்பார்த்தப்படியான பொறுப்பு கொடுக்கவில்லை என்பதில் வருத்தமாம். ஆனாலும் மேயர் வேட்பாளருக்கான வாய்ப்பு தனக்குதான் என தன்னுடன் இருப்பவர்களிடம் சொல்லி வருகிறாராம் அந்த கிருஷ்ணரின் மறுபெயர் கொண்டவர்.
ம்ம்…..
எப்படியோ அது நடக்கட்டும். துணை மேயர் கனவில் உள்ளவர்களின் லிஸ்ட்தான் அதிகமாம். தி.மு.கவில் தோல்வி அடைந்த வேட்பாளர்களும், சீட் கிடைக்காத பொறுப்பாளர்களும் தலைமையில் தங்களுக்கு தெரிந்த முன்னணி தலைவர்களிடம் சத்தமில்லாமல் இப்போதே பரிந்துரைக்க சொல்லி வருகின்றனராம்.
அப்படியா?
”பின்ன இருக்காதா? உம்ம நிருபர்களிடம் சொல்லி உள்ளாட்சி தேர்தலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு இருக்கும் என்பதை விசாரியும்” என நமக்கு ஐடியா கொடுத்துவிட்டு கிளம்பினார் குறிச்சியார்.
Be First to Comment