கோவை வெள்ளலூர் பகுதியில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி, கண்காணிப்பு கேமரா மற்றும் ஏ.டி.எம்.மையத்தில் கொள்ளையர்கள் மிளகாய் பொடி தூவி சென்றதால் பரபரப்பு.
சமீபகாலமாக கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தற்பொழுது கோவை வெள்ளலூர் சித்தி வினாயகர் கோவில் அருகில் உள்ள கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் உள்ளது.
இன்று அதிகாலையில் இந்த ஏ.டி.எம்.மையத்தில் உள்ள இயந்திரத்தில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் அதிகம் மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏ.டி.எம்.மையத்தில் இருந்து வந்த சத்தத்தை தொடர்ந்து அருகில் இருப்பவர்கள் கேட்டதால் அவர்கள் வருவதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு கோவை தெற்கு காவல் உதவி ஆணையாளர் வின்செண்ட் மற்றும் போத்தனூர் போலீசார் கொள்ளை முயற்சி நடந்த இடத்தை பார்வையிட்டனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் ஏ.டி.எம்.மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஸ்ப்ரே அடித்தும், ஏ.டி.எம். மையத்திற்குள் மிளகாய்பொடி தூவியும் சென்றுள்ளனர். கொள்ளையர்களின் இந்த செயல் காவல்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் கொள்ளையர்களை பிடிக்க ஏ.டி.எம்.மையம் இருந்த இடத்தை சுற்றியுள்ள இடங்களில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை தற்பொழுது ஆய்வு செய்து வருகிறார்கள்.
கோவையில் சமீபகாலமாக திருட்டு,வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் பகுதியில் நடைபெற்ற ஏ.டி.எம். கொள்ளை முயற்சி அப்பகுதி மக்களை இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க இரவுநேர ரோந்துபணிகளை அதிகரிக்கவேண்டும் என்பதே அனைவருடைய வேண்டுகோளாகவும் உள்ளது.
Be First to Comment