சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருப்பதால் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அதீத நுரையீரல் தொற்றும், நிம்மோனியா காய்ச்சலும் உள்ளது. இதனால், 27ம் தேதி அவர் விடுதலை ஆவது குறித்த சந்தேகம் எழுந்த நிலையில், திட்டமிட்டபடி 27ம் தேத சசிகலா விடுதலை ஆவார் எனவும், அதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை என்றும் அவரது வழக்கறிஞர் அசோகன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சசிகலாவுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவர் ஜெயிலில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், அவருக்கு துணையாக இருந்த உறவினர்கள் மற்றும் சில நபர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ சுகாதார ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா சோதனை நடத்தப்படவுள்ளது. சிறையில் இருக்கும் இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

அமமுக பொதுச்செயலர் தினகரன் , சசிகலாவை சந்தித்ததால் அவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது சூளகிரியில் உள்ள அவர் பெங்களூரு வரவுள்ளார். இதன்பிறகு இது குறித்து உறுதி செய்யப்படும். இவ்வாறு மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.
இந்நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் அசோகன் கூறுகையில், ‛திட்டமிட்டபடி சசிகலா 27ம் தேதி விடுதலை ஆவார். அதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை. 27ம் தேதிக்கு பிறகு சசிகலாவை ஒருநாள் கூட சிறையில் வைத்திருக்க எவ்வித அதிகாரமும் இல்லை,’ எனக் கூறினார்.
Be First to Comment